Published : 14 Jun 2020 05:58 PM
Last Updated : 14 Jun 2020 05:58 PM
கரோனா பாதிப்பின் எதிரொலியால், சாலையோரத்தில் நுங்கு வெட்டி, விற்பனை செய்து வருகிறார் மருத்துவம் பயிலும் இளைஞர் ஒருவர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள செட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (22). அரசுப் பள்ளிகளில் பயின்ற இவர், 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். மேலும், மருத்துவ நுழைவுத் தேர்வில் 197.25 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் பயின்று வருகிறார்.
சிவாவின் தந்தை ராஜ்குமார், தாய் செல்வி ஆகியோர், தங்களது கிராமத்தில் சிறு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வதுடன், கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர். மேலும், தோட்டங்களுக்குச் சென்று தேங்காய் வாங்கி விற்பது, நுங்கு விற்பது என அயராமல் உழைத்து, மகனின் மருத்துவக் கனவை நனவாக்க பாடுபட்டு வருகின்றனர்.
கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள் என ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் செலவாகும் நிலையில், கடன் வாங்கி மகனைப் படிக்க வைக்கின்றனர்.
கல்லூரி விடுமுறைக் காலங்களில் ஊருக்கு வரும் சிவா, பெற்றோருக்கு உதவியாக தோட்ட வேலைகளில் ஈடுபடுவார். இந்த நிலையில், கரோனா முடக்கம் காரணமாக கல்லூரி மூடப்பட்டுவிட்டதால், ஊருக்கு வந்துள்ள மாணவர் சிவா, தனது படிப்புக்காக வாங்கிய கடனை அடைக்கவும், இறுதியாண்டு கல்வி செலவுக்காகவும் உழைக்கத் தொடங்கியுள்ளார்.
நுங்கு வெட்டி, விற்பனை செய்யும் மருத்துவக் கல்லூரி மாணவர் சிவா.
தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் வீட்டிலிருந்து அதிகாலையில் சரக்கு வாகனத்தில் புறப்படும் சிவா, தோட்டங்களில் இருந்து நுங்கு ஏற்றிக்கொண்டுவந்து, மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் சாலையோரங்களில் நுங்கு வெட்டி, விற்பனை செய்து வருகிறார்.
படிப்பில் சிறந்து விளங்குவதுடன், பெற்றோரின் பாரத்தைக் குறைக்கும் வகையில் கூலி வேலைக்குச் செல்வது, சாலையோரம் நுங்கு விற்பது எனப் பணியாற்றி வரும் சிவா, வேலை முடிந்து பிற்பகலில் வீடு திரும்பியவுடன், வீட்டில் வளர்த்து வரும் ஆடு, மாடு, கோழிகளுக்குத் தீவனம் வைப்பது, தோட்ட வேலை பார்ப்பது ஆகியவற்றிலும் ஈடுபடுகிறார். பின்னர் மாலை முதல் இரவு வரை படிக்கிறார்.
இதுகுறித்து மருத்துவ மாணவர் சிவா கூறும்போது, "எங்கள் கிராமத்தில் யாருக்காவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் பல கிலோமீட்டர் பயணித்துதான், மருத்துவரை அடைய முடியும் என்ற கசப்பான அனுபவமே, மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது. கரோனா ஏற்படுத்திய கால இடைவெளி பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இறுதியாண்டு கல்வி செலவுக்கு உதவி கிடைத்தால் ஊக்கமளிக்கும். என்னைப்போலவே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT