Published : 14 Jun 2020 04:43 PM
Last Updated : 14 Jun 2020 04:43 PM
கடந்த மாத உதவித்தொகையை புதுச்சேரி அரசு ஜூன் மாதம் பிறந்து இரு வாரங்களாகியும் தராததால் புதுச்சேரியில் 1.54 லட்சம் முதியோர், கணவரை இழந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள் தவித்து வருகின்றனர்.
கரோனா நோய்த்தொற்று பேரிடரால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் செய்த போதிலும் பலதரப்பட்ட மக்களும் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
இச்சூழலில் முதியோர், கணவரை இழந்த பெண்கள், திருநங்கைகள் என அரசு உதவித்தொகை பெறும் 1.54 லட்சம் பேருக்கு கடந்த மாதத்துக்கான உதவித்தொகை ஜூன் மாதம் தொடங்கி இரு வாரங்களாகியும் இதுவரை புதுச்சேரியில் தரப்படவில்லை. பலரும் வங்கிக்கணக்கில் பணம் வந்துள்ளதா என்று பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் கூறுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் முதியோர்கள், கணவரை இழந்த பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள், ஆதரவற்ற திருநங்கைகள் என ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேர் அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இந்த தொகை, மேற்படி பயனாளிகளின் குடும்பங்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்க செய்கிறது. தொடக்கத்தில் 56 முதல் 60 வயதுடையோருக்கு ரூ.1,500-ம், 60 வயதுக்குப் பிறகு ரூ.2,000-ம் தரப்படுகிறது.
கடந்த மாதத்திற்கான உதவித் தொகை இரண்டு வாரங்களை கடந்தும் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் பயனாளிகளின் குடும்பங்கள் மிகுந்த சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்த பேரிடர் காலத்தில் அவர்களின் குடும்பத்திற்கு உதவித் தொகை காலத்தோடு கிடைத்தால் பெரிய உதவியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, "உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு உள்ளது. தகுதியில்லாதோர் வாங்குவதாகவும், அதை ஆய்வுக்கு உட்படுத்தவும் துணைநிலை ஆளுநர் தரப்பில் வலியுறுத்தி வருகின்றனர். நிதி ஒப்புதலுக்கு செல்லும்போதும் தொடர் கேள்விகள் எழுப்பப்படுகிறது" என்று தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக ராஜ்நிவாஸ் தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் மொத்தம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 847 பேர் முதியோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். மே மாத ஓய்வூதியம் தருவதற்கான கோப்பு ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸுக்கு கடந்த 11-ம் தேதி வந்தது. மொத்தம் ரூ.28.54 கோடிக்கு ஓய்வூதியம் தர ஒப்புதல் அன்றைய தினமே ஆளுநர் கிரண்பேடி வழங்கியுள்ளார்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT