Published : 14 Jun 2020 03:34 PM
Last Updated : 14 Jun 2020 03:34 PM
கரோனாவை கட்டுப்படுத்தும் மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்துவேன் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் நாராயணசாமி இன்று (ஜூன் 14) செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் வியாபாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே கரோனா பரவலை தடுத்து நிறுத்த முடியும். ஆனால், பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக குறைவாக உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் அதிகமானோர் சுற்றுகின்றனர். இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
நேற்று நகைக்கடை வியாபாரிகள் என்னை சந்தித்து 'மும்பை, டெல்லியில் இருந்து நகைகள் வருவதற்கு காலதாமதம் ஆகிறது. இருக்கிற பொருட்களை விற்றுவிட்ட பிறகு நகை இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் வருகையும் குறைந்துள்ளது. எனவே, கடைகளின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
காலையில் 10 மணிக்குத் திறந்தால் மாலை 6 மணிக்கு மூட தயாராக இருக்கிறோம். இதுசம்பந்தமாக அரசு முடிவு எடுக்க வேண்டும்' என்றனர்.
புதுச்சேரிக்கு வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் கட்டுப்படுத்தப்பட்டதால் தற்போது 40 சதவீதம் தான் வியாபாரம் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ந்து மாநில அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. மீன் மார்க்கெட்டை பொறுத்தவரை மொத்த வியாபாரம் நவீன மீன் அங்காடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
காய்கறி கடைகளை பொறுத்தவரை அவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கும் அரசு முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
ஏற்கெனவே புதுச்சேரியில் குறைவாக இருந்த கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையை பார்க்கும்போது நாம் அதிக கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என்று மாநில அரசு சார்பில் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது.
கடலூரில் 500-க்கு மேற்பட்டோரும், விழுப்புரத்தில் 400-க்கு மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்காக வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கலந்து பேசி இன்னும் சில கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டுமா? என்று ஆலோசிக்க உள்ளோம்.
16, 17 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக மாநில முதல்வர்களுடன் உரையாடுகிறார். இதில் 16 ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் பிரதமருடன் உரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் புதுச்சேரியில் நாம் முழுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்தினால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பீட்டை தருவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. புதுச்சேரியை போன்று சில மாநிலங்களில் கரோனா தொற்று மிக குறைவாக உள்ளது. இதனை பற்றி மத்திய அரசு கவலைபடுவதில்லை. அந்த மாநிலங்களுக்குத் தேவையான நிதியுதவியை கொடுப்பதில்லை.
சில மாநிலங்களில் முனைந்து செயல்பட்டு கரோனாவை தடுத்து நிறுத்துகின்ற வேளையில், அந்த மாநிலங்கள் மீது மத்திய அரசு கவனம் செலுத்தி நிதியுதவி வழங்க வேண்டும். இதனை காணொலி காட்சி மூலம் பிரதமருடன் பேசும்போது வலியுறுத்துவேன். மேலும், புதுச்சேரி பொருளாதார வளர்ச்சிக்காக தாராளமாக நிதியுதவியை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைப்பேன்.
கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதுதொடர்பாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கலந்து பேசி ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஏஎன்எம் செவிலியர்கள், ஆஷா பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுசம்பந்தமாக ஏற்கெனவே கோப்பு தயாராக உள்ளது. நம்மிடம் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன.
தேவைப்பட்டால் சில தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் கலந்து பேசி தேவையான படுக்கைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி மாநில அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்களின் உரிமையை காக்க மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறோம்.
இதற்கு முக்கியமான காரணம், சமூக நீதியில் உறுதியாக இருக்கும் எங்கள் அரசு அதனை நடைமுறைப்படுத்த உறுதியாக இருப்பது தான்.
மாநிலத்தைப் பொருத்தவரை கரோனா தொற்று பரிசோதனைக்கு தேவையான கிட்டுகள் வாங்குவதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிட்டுகள் வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இப்போது சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்துள்ளோம். தொடர்ந்து நிறைய பரிசோதனைகள் செய்தால்தான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்று நம்மால் கண்டறிய முடியும். ஆகவே, அதற்கான நிதியை முதல்வர் கரோனா நிதியில் இருந்து கொடுக்க மாநில அரசின் சார்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இது கரோனா தொற்று பரவுகின்ற காலம். எனவே, கரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம். இன்னும் 2, 3 நாட்கள் பார்ப்போம். பிரதமரின் உரைக்கு பிறகு சில கடுமையான முடிவுகளை எங்கள் அரசு எடுக்க வேண்டி இருக்கும். அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
எங்களுக்கு வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட மக்களின் உயிர் முக்கியம். அதை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம். பொதுமக்கள் அந்த சிரமங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT