Published : 14 Jun 2020 12:45 PM
Last Updated : 14 Jun 2020 12:45 PM
தலைநகர் சென்னை கரோனா கேந்திரமாகியுள்ள சூழலில், அங்கிருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்துகின்றனர் காவல்துறையினர்.
ஆரம்பத்தில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில்தான் வாகனத் தணிக்கை தீவிரமாக இருந்தது. இப்போது மதுரையிலும் வெளியூர் வாகனங்களை தீவிரமாகச் சோதிக்கிறார்கள் போலீஸார். சரக்கு வாகனங்களிலும் ஏறி, உள்ளே ஆட்கள் பதுங்கியிருக்கிறார்களா என்றும் பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னை மண்டலத்தைச் சேர்ந்த பதிவெண் கொண்ட வாகனங்கள்.
இது ஒருபுறமிருக்க, முறையாக இ- பாஸ் பெற்று பயணிகளை சென்னைக்கோ, அல்லது சென்னையில் இருந்தோ ஏற்றி வருகிற வாடகை கார் ஓட்டுநர்களையும் பிடித்து தனிமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் காவல் மற்றும் சுகாதாரத்துறையினர். இதனால் டிரைவர்கள் பலர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள்.
இதுகுறித்து தென்காசியைச் சேர்ந்த டிரைவர் வீரன்மாடசாமி நம்மிடம் பேசுகையில், "சில நேரங்களில் டிரைவர்களுடன் வண்டியையும் பிடித்து வைத்துக்கொள்கிறது போலீஸ். வேறோரு ஆஃபருக்காக முன்பணம் வாங்கிய டிரைவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு வாரம் தனிமைப்படுத்துகிற காலத்தில் அவரது குடும்பச் செலவுக்கு யார் பணம் கொடுப்பார்கள்? தமிழ்நாட்டில் இருந்து இ- பாஸ் மூலம் கேரளா செல்லும் வாகனங்களை, கேரள போலீஸார் ஆரியங்காவு சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி, பயணிகளை இறக்கிவிடுகிறார்கள்.
பிறகு தமிழ்நாட்டு வாகனத்தைத் திருப்பியனுப்பிவிட்டு, கேரள வாடகை காரில் அவர்களை ஏற்றி அனுப்புகிறார்கள். இது எங்களுக்கு வருமான இழப்புதான் என்றாலும் கூட, தனிமைப்படுத்தும் கொடுமையில் இருந்து தப்பித்துக்கொள்கிறோம்.
எனவே, தமிழ்நாட்டிலும் இந்த நடைமுறையை அரசு கொண்டுவர வேண்டும். சென்னையில் இருந்து வருகிற வாகனங்களைத் தடுத்து நிறுத்துகிற போலீஸார், பிற மாவட்ட வாகனங்களில் பயணிகளை ஏற்றி அனுப்பலாம். இதனால் வாடகைக் கார் ஓட்டுநர்களின் பிழைப்பு பாழாவது தடுக்கப்படும்" என்றார்.
ஆனால் காவல்துறை தரப்பிலோ, “தனிமைப்படுத்தலால் வாடகைக் கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மைதான். ஆனால், சென்னை சென்று வரும் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கு ஒருவேளை கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இங்கே வந்ததும் அவர்களின் காரில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் எளிதில் தொற்று பரவி விடுமே. சென்னையில் இருந்து வாடகைக் கார்களில் வரும் பயணிகளை மாவட்ட எல்லையில் வேறொரு காருக்கு மாற்றினால் அந்தக் கார் டிரைவரும் அதன் பிறகு அந்தக் காரில் பயணிக்கிறவர்களும் பாதிக்கப்படுவார்களே. அதனால் தான் நாங்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கிறது. கரோனா காலத்தில் எத்தனையோ சிரமங்களைச் சகித்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் இதையும் சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT