Published : 13 Jun 2020 07:29 PM
Last Updated : 13 Jun 2020 07:29 PM
கோவை மாவட்டத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் குடும்பத்தினருடன் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் பிற பகுதிகளைப் போலவே, கோவை மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியக் காய்கனிகள் பெரும்பாலும் உதகை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து வெளியூர்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், சென்னை மற்றும் இதர பகுதிகளுக்குச் சென்று வரும் ஓட்டுநர்கள் மூலம் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள் / ஓட்டுநர்கள் சில விஷயங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். எந்த இடத்திலிருந்து சரக்கு ஏற்றப்படுகிறது, எந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது, நாள் மற்றும் நேரம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட விவரங்களை, தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி தவறாமல் பின்பற்ற வேண்டும். இதைக் கடைப்பிடிப்பதன் மூலம் கரோனா தொற்றினை எளிதாகக் கட்டுப்படுத்த இயலும்.
எனவே, மோட்டார் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 223-ன் படி வாகன நடைச்சீட்டைப் பராமரிக்க வேண்டியதும், அதன் வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றுவதும் கட்டாயம் ஆகும். மேலும், சென்னை மற்றும் இதர பகுதிகளுக்குச் சரக்கு ஏற்றிச் சென்று வந்த ஓட்டுநர்கள் தாமாகவே முன்வந்து குடும்பத்தினருடன் கரோனா பரிசோதனை செய்துகொண்டு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவறினால் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT