Published : 13 Jun 2020 05:52 PM
Last Updated : 13 Jun 2020 05:52 PM
சேலம் மாநகர காவல் துறை சார்பில் செல்போன் வாயிலாக பள்ளிக் குழந்தைகள் கல்வி கற்கும்போது, ஆபாச விளம்பரங்களைத் தடுத்து நிறுத்த, பெற்றோர் 'பிளே ஸ்டோர் ஆப்' மூலம் கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஆலோசனை வழங்கியுள்ளது.
கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை, பள்ளிக்கூடங்களை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்தலைத் தொடங்கியுள்ளன. பெற்றோர்களின் 'ஸ்மார்ட் ஃபோன்' வாயிலாக குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், இணையதள வாயிலாக ஆபாச விளம்பரங்கள் பல, இடையே தோன்றி வருவதால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தைகள் பள்ளி பாடம் படிக்கும்போது, தேவையில்லாத ஆபாசப் பட விளம்பரங்கள், அவர்களின் பால் மனதைக் கெடுக்கும் என்ற கவலையில் பெற்றோர்கள் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சேலம் மாநகரக் காவல்துறை சார்பில் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஆலோசனை வழங்கி வருகின்றனர். 'பெற்றோர்களின் அன்பான கவனத்துக்கு' என்ற தலைப்பில், செல்போனில் வரும் ஆபாசப் பட விளம்பரங்களை எவ்வாறு பெற்றோர் தடுத்து நிறுத்துவது என்பது குறித்த விவரங்களைப் பதிவேற்றி, சமூக வலைதளங்கள் மூலம் சேலம் மாநகரக் காவல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சேலம் மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு ஆலோசனை:
"பெற்றோர்களின் கனிவான கவனத்துக்கு:
இனி, நம் குழந்தைகள் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக ஸ்மார்ட்போன் பயன்பாடும், கேம் ஸ்கேனர், தீக்சா (Diksa), எம்.எக்ஸ். வீடியோபிளேயர் (Mx Videoplayer), இ.எஸ்.ஃபைல் மேனேஜர் (ES file manager) போன்ற ஆண்ட்ராய்டு செயலிகளையும், யூடியூபையும் பயன்படுத்த தேவையும் வரலாம். அவ்வாறு பயன்படுத்தும்போது, அடிக்கடி இடையிடையே சில முகம் சுளிக்க வைக்கும் விளம்பரங்களும் வரலாம். எனவே, முன்னெச்சரிக்கையாக, செல்போனில் செய்ய வேண்டியவை;
'பிளேஸ்டோரில்' (Play store) சென்று அமைப்புகளில் (Settings) 'Parent control' option-ஐ 'on' செய்யவும். அதன் கீழே உள்ள 'Apps and Games'- ஐ கிளிக் செய்து '12+' ல் டிக் செய்யவும். அடுத்ததாக 'Films'-ஐ கிளிக் செய்து 'U' என்பதை 'டிக்' செய்யவும். அதேபோல் 'YOUTUBE' அமைப்புகளில் (settings) General -ல் 'Restriction mode'- ஐ 'On' செய்யவும். இப்போது, நம் குழந்தைகளின் ஸ்மார்ட்போனில், தேவையற்ற விளம்பரம், வீடியோ குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானதாக இருக்கும்"
இவ்வாறு அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரக் காவல் துறை சமூக வலைதளங்கள் வாயிலாக ஏற்படுத்தி வரும் இந்த விழிப்புணர்வு ஆலோசனைக்குப் பெற்றோர்கள் மிகுந்த வரவேற்பு அளித்து, பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT