Published : 13 Jun 2020 05:41 PM
Last Updated : 13 Jun 2020 05:41 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று தற்போது நாள் தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை, மும்பை உட்பட வெளியூர்களில் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தோர் தினமும் அதிகமானோர் வருவதே இதற்கு காரணமாகும்.
அதிலும் முறைப்படி இ பாஸ் பெறாமலே குமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளை தவிர பிற குறுக்கு சாலைகளில் நூற்றுக்கணக்கானோர் வருவது தெரியவந்துள்ளது. இதைத்தெடடர்ந்து அஞ்சுகிராமம், லெவிஞ்சிபுரம் வழித்தடத்தில் உள்ள குறுக்கு பாதைகளை சீல் வைத்த போலீஸார் கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் பல வழிகளில் இ பாஸ் இல்லாமல் அதிகமானோர் வருவதால் கரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கூறுகையில்; சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய சிகப்பு மண்டலங்களில் இருந்தும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியை தவிர பிற மாவட்டங்களில இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவோர்கள் முறையாக இ பாஸ்சிற்கு விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்னரே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புறப்பட்டு வரவேண்டும்.
அவ்வாறு முறையான நுழைவு அனுமதியான இ பாஸ் இன்றியோ, பரிசோதனைக்கு உட்படாமலோ யாராவது மாவட்டத்திற்குள் வருவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் 10 பேருக்கு தொற்று..
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 27,649 பேர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 140 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
களியக்காவிளை சோதனை சாவடியில் கரோனா தடுப்பு பணியில் இருந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது சளி, ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இதைப்போல் குமரி மாவட்டம் சூரியகோட்டை சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் இருந்து தனது 11 மாத கைக்குழந்தையுடன் சொந்த ஊர் வந்தார். பரிசோதனையில் அந்த பெண்ணிற்கும், குழந்தைக்கும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
மேலும் நாகர்கோவில் முதன்மை கல்வி லுவலகத்தில் வேலை செய்யும் திருநெல்வேலியை சேர்ந்த ஊழியரது மாமியாருக்கு கரோனா தொற்று இருந்ததை தொடர்ந்து, அவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது அவருக்கும் கரோனா இருப்பது உறுதியானது. குமர மாவட்டத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT