Published : 13 Jun 2020 05:21 PM
Last Updated : 13 Jun 2020 05:21 PM
தென்னக ரயில்வேயில் 96 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், தமிழர்கள் வெறுமனே 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தென்னக ரயில்வேயின் தமிழர் விரோதப் போக்கைக் காட்டுகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘’தென்னக ரயில்வேயில் சரக்கு வண்டியின் பாதுகாவலர் பதவிக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. துறையில் பணியாற்றுகிற சுமார் 5,000 பேர் கலந்துகொண்ட இத்தேர்வில், 96 பேர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ஐவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 91 பேரும் வட இந்தியர்கள்.
தேர்வு எழுதியவர்களில் சுமார் 3,000 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அதில் ஐவர் மட்டுமே தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே தென்னக ரயில்வேயில் தமிழர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் இது, தென்னக ரயில்வேவின் தமிழர் விரோதப் போக்கின் மற்றொரு வெளிப்பாடாக உள்ளது.’’
இவ்வாறு சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT