Published : 13 Jun 2020 04:28 PM
Last Updated : 13 Jun 2020 04:28 PM
அனைத்து இட ஒதுக்கீடுகளையும் அரசமைப்புச் சட்டம் 9 ஆம் அட்டவணையில் கொண்டுவர மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜூன் 13) வெளியிட்ட அறிக்கை:
"சமூக நீதி - இட ஒதுக்கீடு என்பது, நாட்டின் பெரும்பான்மையான 80 சதவிகித மக்களைப் பாதுகாத்து முன்னேறிடச் செய்ய நமது பழம்பெரும் தலைவர்கள் ஜோதி பாபூலே, சாகுமகராஜ், பெரியார், அம்பேத்கர், திராவிடர் இயக்கம், கர்நாடகாவில் சமூக நீதி இயக்கங்கள் போன்றவை பல நூற்றாண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமையாகும்.
உலகத்திலே பெரும்பாலான மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட சாஸ்திரங்களும், மதமும் இந்தியாவில் மட்டும்தான் உண்டு.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட எப்படி உதவிக்கான கருவிகள் போன்றவை தேவையோ அதுபோலத்தான் கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை, இட ஒதுக்கீட்டு உரிமை, சமூக நீதி ஆகியவை ஒடுக்கப்பட்ட மக்களான பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்குத் தேவை என்பதை உணர்ந்தே இந்திய அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் இதனை அடிப்படை உரிமைகள் அத்தியாயமான பகுதியில் இடம்பெறச் செய்தனர்.
அதில் கல்வி உரிமைக்கான பிரிவு தொடக்கத்தில் இல்லாத குறை, 1950-ல் பெரியாரின் போராட்டம் காரணமாக, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் முறையே மத்தியில் பிரதமராகவும், 1951-ல் சட்ட அமைச்சராகவும் இருந்தபோது நிறைவேற்றினர். அதே வழியில் பின்னாளில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் பலவும்கூட நிறைவேற்றப்பட்டுள்ளன.
நீதிபதிகள் கூறியது, அதிர்ச்சியும், வேதனையும் தருவதாகும்!
இந்நிலையில், மத்திய - மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு சட்டப்படி உள்ள உரிமையைக் கூட புறந்தள்ளி கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவக் கல்வி சேர்க்கையில் வெறும் பூஜ்ஜிய இட ஒதுக்கீடே வந்துள்ள சமூக அநீதியை, திராவிடர் கழகம் சுட்டிக்காட்டிட, பெரியாரின் சமூக நீதி மண்ணான தமிழ்நாடு, இந்தியாவுக்கே வழி - ஒளி பாய்ச்சி, இது சம்பந்தமாக நீதி கேட்டு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி முதல் அனைத்து முக்கிய கட்சிகளும் சட்டப் பரிகாரம் தேட உச்ச நீதிமன்றத்தை அணுகிய நிலையில், நேற்று முன்தினம், உயர் நீதிமன்றத்திற்கே செல்லுங்கள் என்றும், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என்றும் சில நீதிபதிகள் கூறியது, அதிர்ச்சியும், வேதனையும் தருவதாகும்.
இப்போது பிஹார் மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் வருகிறது; அங்கே சமூகநீதி உணர்வு ஓரளவு எழுச்சி பெற்றுள்ளது. அதற்குக் கர்ப்பூரி தாக்கூர் தொடங்கி, லாலு பிரசாத் வரை முக்கிய காரணமாகும். மண்டல், பிஹாரைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா
நேற்று பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, "பாஜக இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்றுக்கொண்ட ஒரு கட்சி. எங்களுக்கு சமூக நீதி வேண்டும் என்பதில் உறுதியான கருத்து உண்டு" என்று கூறியுள்ளார். இன்று செய்தித்தாள்களிலும் அந்தச் செய்தி வெளிவந்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலின்போது பிஹாரில் முன்பு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இட ஒதுக்கீடு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பேசி, அது கடும் எதிர்ப்பை உருவாக்கவே, உடனே பின்வாங்கி, 'பிளேட்'டைத் திருப்பிப் போட்டார்; இட ஒதுக்கீடு தேவைதான் என்று குரலை மாற்றினார்.
அதுபோன்று நட்டாவின் உறுதி அமைந்துவிடக் கூடாது என்றால், அதற்குப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இழைக்கப்பட்ட பச்சை அநீதியைக் களைய உடனடியாக மத்திய அரசுடன், குறிப்பாக பிரதமர் மோடியுடன் பேசி, இழந்த இடங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்க அவசரச் சட்டம் போன்ற ஏற்பாடுகளைச் செய்ய வற்புறுத்தலாம்.
ராம்விலாஸ் பஸ்வானின் கருத்து வரவேற்கத்தக்கது!
மத்தியில் உள்ள தேசிய முன்னணி அரசில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தியின் நிறுவனத் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் எல்லா இட ஒதுக்கீடு சட்டங்களையும் 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பின்கீழ் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. இந்த வகையில் தமிழ்நாடு 69 சதவிகித ஒதுக்கீடு அத்தகைய சட்டத்தின் மூலம் வழிகாட்டியுள்ளது!
பஸ்வானைப் பொறுத்தவரையில் அவர் பாஜகவின் தலைமையில் உள்ள கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், இடஒதுக்கீடு - சமூக நீதிக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முதுபெரும் தலைவர். அம்பேத்கர், பெரியார் கொள்கைகளில் மிகவும் மாறாத பற்றுறுதி உள்ளவர். மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த அவர் தன் விவாதத்தை அந்நாளில் நாடாளுமன்றத்தில் முதலில் தொடங்கி வைத்தவரும் கூட; மூத்த அமைச்சரான அவரது கருத்துப்படி, உண்மையிலேயே பாஜகவுக்கு சமூக நீதியில் கவலையும், அக்கறையும், ஈடுபாடும் இருக்குமானால், அதுபோன்ற செயல்கள் மூலம் நாட்டோருக்கு நிரூபிக்க முன்வர வேண்டும், தன்னை பிற்படுத்தப்பட்டவர் என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.
பயன்பெறக் கூடிய பிள்ளைகள் எல்லாக் கட்சி பிள்ளைகளும்தான்
முதலில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக, அவசரமாக உரிய பரிகார நடவடிக்கையை எடுத்து, நாட்டு மக்களின் சமூக நீதிக் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரட்டும். அதனால் பயன்பெறக் கூடிய பிள்ளைகள் எல்லாக் கட்சி பிள்ளைகளும்தான் என்பதை பாஜகவினர் உள்பட எவரும் மறந்துவிடக் கூடாது!
இட ஒதுக்கீட்டுக்கு நாட்டில் பிராமணர்களைத் தவிர எந்த எதிர்ப்பாளர்களும் இல்லை
பாஜக ஆதரித்ததன் மூலம் இட ஒதுக்கீட்டுக்கு நாட்டில் பிராமணர்களைத் தவிர எந்த எதிர்ப்பாளர்களும் இல்லை, இல்லவே இல்லை என்பது புரிந்துவிட்டது. ஜனநாயகப்படி பெரும்பான்மை மக்களின் விருப்பம், உரிமை நிறைவேற்றப்பட வேண்டாமா?"
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT