Published : 13 Jun 2020 04:23 PM
Last Updated : 13 Jun 2020 04:23 PM
கரோனா வார்டில் பணியாற்றுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட 2,570 தற்காலிக செவிலியர்களில் 1,166 பேர் சேராத நிலையில், மீண்டும் 1,166 பேரைத் தேர்வு செய்ய ஆணையிட்டது அரசு. ஆனால், அதிலும் வெறும் 25 சதவீதம் பேர் மட்டுமே பணியில் சேர்ந்திருக்கிறார்கள்.
கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கேற்ப மருத்துவத் துறையை வலுப்படுத்தும் வகையில் புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நிபுணர்களைப் பணியமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஏற்கெனவே 530 மருத்துவர்கள், 2,570 செவிலியர்கள், 1,508 ஆய்வக நிபுணர்கள், 2,715 சுகாதார ஆய்வாளர்களுக்குப் பணி நியமன ஆணை அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனால், இவர்களில் பலரும் பணியில் சேர விருப்பமில்லை என்று கூறிவிட்டார்கள். குறிப்பாக செவிலியர்கள். காரணம், செவிலியர் பணியானது வெறுமனே 6 மாத தற்காலிகப் பணி மட்டுமே என்று அரசு அறிவித்திருந்தது. ‘ரூ.14 ஆயிரம்தான் சம்பளம். சென்னை கரோனா வார்டில்தான் பணிபுரிய வேண்டும். இவர்கள் யாரும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள். சீனியாரிட்டியும் கோர முடியாது’ என்று அரசாணையிலேயே கூறப்பட்டு இருந்தது.
இதனால், ஏப்ரல் மாதம் பணி நியமன ஆணை பெற்ற 2,570 செவிலியர்களில் 1,166 பேர் சேரவில்லை. சென்னையில் கரோனா தொற்று கடுமையாக அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்பியே ஆக வேண்டிய இக்கட்டான நிலைக்கு அரசு ஆளானது. இதைத் தொடர்ந்து, கடந்த 8-ம் தேதி தமிழ்நாடு அரசு இன்னொரு ஆணை பிறப்பித்தது. அதன்படி, பணியில் சேராத 1,166 செவிலியர்களுக்குப் பதில், மருத்துவத் தேர்வாணயத் தேர்வெழுதி, மதிப்பெண் அடிப்படையில் அடுத்தடுத்த நிலையில் இருந்த 1,166 பேரைத் தேர்வு செய்வதாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 9-ம் தேதியன்று, தேர்வான 1,166 பேருக்கும் மின்னஞ்சல் வாயிலாகப் பணி ஆணையும் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ‘ஆணை கிடைத்த மூன்று நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் பணியில் சேரவில்லை என்றால், இந்த ஆணை ரத்தாகிவிடும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதன்படி 12-ம் தேதிக்குள் அவர்கள் அனைவரும் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், 4-வது நாளான இன்று (13-ம் தேதி) மதியம் வரையில் வெறுமனே 25 சதவீதம் பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளதாக மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு பணியில் சேர மறுத்தவர்களில் பெரும்பாலானோர் சென்னையில் இருந்து தொலைதூர மாவட்டங்களில் இருப்பவர்கள். அவர்களில் ஒரு செவிலியரிடம் பணியில் சேராததற்கான காரணம் கேட்டபோது, "எப்படி ராணுவ வீரர்கள் எந்த நேரமானாலும் போருக்குத் தயாராக இருக்க வேண்டுமோ, அப்படித்தான் செவிலியர்களும். நோய்த்தொற்றுக் காலத்தில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பணியில் சேரும் மனப்பான்மை வேண்டும் என்றுதான் எங்களுக்கு நர்சிங் பயிற்சிப் பள்ளிகளில் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், போருக்குச் செல்பவர்களுக்கு எப்படிக் கவச உடையும், ஆயுதமும், நீங்கள் மறைந்தால் உங்கள் குடும்பத்துக்கு நாங்கள் பொறுப்பு என்ற அரசின் உத்தரவாதமும் தேவையோ, அதைப் போல செவிலியர்களுக்கும் தேவை.
ஆனால், இவர்கள் வெறுமனே 14 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம், அதுவும் 6 மாதம் மட்டுமே வேலை, நேரடியாகக் கரோனா வார்டில் பணிபுரிய வேண்டும், அதுவும் சென்னையில்தான் சேர வேண்டும் என்று பணி ஆணையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே பணிபுரிகிற செவிலியர்களுக்கே முகக்கவசம் உள்ளிட்டவை சரியாக வழங்கப்படவில்லை. கரோனா தடுப்புப் பணியில் இறக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிதி தருவோம் என்று அரசு அறிவித்துவிட்டு, சென்னையில் தலைமை செவிலியர் மறைந்தபோது வெறும் ரூ.5 லட்சம் மட்டுமே கொடுத்தார்கள். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நிரந்தரப் பணியில் இருக்கும் செவிலியர்களில் சிலரே, நம் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று விருப்ப ஓய்வு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நிரந்தரப் பணியில் இருக்கும் செவிலியர்களுக்கே இந்த நிலை என்றால், தற்காலிக செவிலியர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா? எங்கள் உயிருக்கும், குடும்பத்துக்கும் உத்தரவாதம் தராமல் கொத்தடிமைகளைப் போல வேலைக்கு அழைக்கிறது அரசு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, பணி நிரந்தரம் செய்கிறோம் என்று சொல்லி வேலைக்குச் சேர்த்த செவிலியர்களையே அரசு இதுவரையில் பணி நிரந்தரம் செய்யவில்லை. இவர்களை நம்பி எப்படி நாங்கள் இந்தப் பணியில் சேர முடியும்?" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT