Published : 13 Jun 2020 01:56 PM
Last Updated : 13 Jun 2020 01:56 PM
அரசு செயல்பாட்டில் மூத்த அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டார்களா? அல்லது தாங்களாகவே ஒதுங்கிக் கொண்டார்களா என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூன் 13) வெளியிட்ட அறிக்கை:
"கொடிய கரோனா நோய்த் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. சென்னை மாநகரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மரணத்தின் எண்ணிக்கையும் அதிகரித்து மக்களைக் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நோய்த் தடுப்புப் பணியில் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, கட்டுப்படுத்தி தீர்வு காண வேண்டிய அரசு குழப்பத்தின் உச்சத்தில் ஆழ்ந்துள்ளது.
காலையில் ஓர் அறிவிப்பு, பின்னர் மாலையில் அதனை மறுத்து மற்றொரு அறிவிப்பு, இரவில் இரண்டையும் மறுத்து மூன்றாவது அறிவிப்பு என வெளியிட்டு அரசு தானும் குழம்பி மக்களையும் குழப்பி விபரீத விளையாட்டில் ஈடுபட்டு வருகிறது.
எந்த ஒரு பிரச்சினைக்கும் சரியான தீர்வு காணக்கூடிய முடிவுகளை மேற்கொண்டு, அதனை உறுதியாக நிறைவேற்றுவது இல்லை.
'ஆன்லைன் கல்வி முறையை அனுமதிக்க மாட்டோம்' என்று காலையில் அறிவித்த பள்ளிக் கல்வி அமைச்சர் மாலையில் அனுமதி வழங்கப்பட்டது என்கிறார். சில மணி நேரங்களில் இந்த மாற்றம் ஏற்படக் காரணம் என்ன? இதுவரை விளங்கவில்லை.
பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்கள் என்றால், 'முடியாது நடத்தியே தீருவோம்' என்று மாணவர்களையும், பெற்றோர்களையும் கடும் குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கி, நிர்பந்தம் ஏற்பட்ட பின்னர் தேர்வை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவிக்கிறார்.
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள், டீக்கடை, உணவகங்கள், தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதும் அதன் காரணமாக தனிமனித இடைவெளி முறையை அரசே சீர்குலைத்ததும் நடந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் செய்திட்ட பெரும் குழப்பம், அதனால் ஏற்பட்ட விபரீதங்கள், வியாபாரிகள் மேல் பழிபோட்டு அரசு தப்பிக்க முயற்சி செய்தது.
கரோனா தொற்று குறித்து தினசரி செய்தியாளர்களை சந்தித்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் என காணாமல் போகிறார். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினசரி பேட்டியளிக்கிறார். பின்னர் அவர் காணாமல் போய் அமைச்சர் வருகிறார்.
சென்னை பெருநகரில் கரோனா தொற்று பரவல் தீவிரமாவதால் மண்டலத்திற்கு ஒரு அதிகாரி என நியமிக்கப்பட்டனர். அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டது. சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். இவை அனைத்தின் மீதும் நம்பிக்கை இழந்த அரசு நுண் செயல்திட்ட சிறப்பு ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார்.
இதற்கிடையில் சென்னை மாநகர ஆணையர், 'ஒருவருக்கு நோய்த்தொற்று குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால், அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தில் உள்ள அத்துனை பேரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்' என்று அறிவிக்கிறார். இந்த செய்தியை அடுத்த நாள் சிறப்பு அதிகாரி மறுத்துப் பேசுகிறார்.
கரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாக அரசின் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிப்பதற்கு ஒரு விசாரணை குழு அமைத்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் அறிவிக்கிறார். உடனடியாக அறிவிப்பை வெளியிட்ட சுகாதாரத்துறை செயலாளர் அதிரடியாக வேறு துறைக்கு மாற்றப்படுகிறார்.
இந்தத் தலைசுற்றும் குழப்பத்தில் ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமிக்கப்படுகிறார். கரோனா நோய் தொற்று வெளிப்பட்ட ஆரம்பக் காலத்திலிருந்தே இன்று வரை தீர்க்கமாக எந்த ஒரு முடிவையும் அரசால் துணிவாக எடுத்து நிறைவேற்ற முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதை நிகழ்ச்சிப் போக்குகள் வெளிப்படுத்துகின்றன.
அரசு செயல்பாட்டில் மூத்த அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டார்களா? அல்லது தாங்களாகவே ஒதுங்கிக் கொண்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கூட்டுத் தலைமையாக செயல்பட வேண்டிய அமைச்சரவையிலும் ஒரு அணி உணர்வோடு செயல்பட வேண்டிய அதிகார வர்க்கத்திலும் ஒருங்கிணைப்பு இல்லாத முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுவது வரலாற்றுத் துயராகும்.
மார்ச் முதல் ஜூன் வரை ஏற்பட்டுள்ள பாதிப்பை, உயிரிழப்பைக் கவனத்தில் கொண்டு, படிப்பினையாகக் கொண்டு, ஆக்கபூர்வமான முறையில் முடிவு எடுத்திடவும், கூட்டுப் பொறுப்புக்கு மதிப்பளித்தும், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இதுவரையில் அறிந்தோ, அறியாமலோ பின்பற்றி வந்த முரண்களை முற்றாகக் கைவிட்டு, ஒருங்கிணைந்து செயல்படவும் முன்வர வேண்டுகிறோம்.
மேலும் தலைநகர் சென்னையில் வாழும் மக்களிடத்தில் காணப்படும் அச்சமும், பீதியும், நம்பிக்கையின்மையும் அனைவரையும் மிக கவலைகொள்ளச் செய்துள்ளது.
இந்நிலையில், இனியும் கால தாமதமின்றி, முதல் கட்டமாக சென்னை நகரில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மண்டலங்களில் வீடு, வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்திடவும், மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT