Published : 13 Jun 2020 06:00 PM
Last Updated : 13 Jun 2020 06:00 PM
கரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படாத நிலையில், பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் இணைய வழியில் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகின்றன. அதுபோக மற்ற நேரங்களிலும் குழந்தைகள் யூடியூப், விளையாட்டுகள் என ஸ்மார்ட் போன்களிலேயே அதிக நேரம் செலவு செய்து வருவதால் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே பார்வைக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நாகர்கோவிலைச் சேர்ந்த இல்லத்தரசி விக்னேஷ்வரி, “குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடங்கள்தான் திறக்கவில்லை. மற்றபடி, ஃபீஸ் கட்டச் சொல்லி ஆன்லைனில் வகுப்பு எடுக்கிறார்கள். ஒரே நேரத்தில் நாற்பதுக்கும் அதிகமானோருக்கு ஒரே ஆசிரியர் பாடம் எடுப்பார். குழந்தைகள் ஆசிரியரை நேருக்குநேர் முகம் பார்க்கும்போதே அவர்கள் கற்றலின் நுட்பத்தை அறியமுடியும். ஆனால், இணைய வழியில் அதெல்லாம் சாத்தியமில்லை. என்றாலும் தொற்றுப்பரவலைத் தடுக்க அது அவசியம் என்பதால் குழந்தைகளுக்கு செல்போனைக் கொடுத்து இணைய இணைப்பும் வழங்கியுள்ளோம்.
தினமும் மூன்று மணிநேரத்துக்கும் கூடுதலாக பாடத்திட்டம் என்னும் பெயரிலேயே ஸ்மார்ட் போன்களுக்குள் குழந்தைகள் மூழ்கிப் போகிறார்கள். அதன் பின்னரும், படித்துப் படித்து போர் அடிப்பதாகச் சொல்லிவிட்டு ஸ்மார்ட்போனிலேயே கேம்ஸ் விளையாடுகிறார்கள். அதே போனிலேயே யூடியூப் பார்க்கிறார்கள். நாள் முழுவதும் கண்களை ஸ்மார்ட் போன்களுக்குள் உலவ விட்டிருக்கும் இந்த குழந்தைகளைப் பார்த்தால் பயம் வருகிறது. வளரிளம் பருவத்திலேயே பார்வைக் கோளாறுகள் ஏற்பட்டு கண்ணாடி அணியும் நிலைக்குத் தள்ளப்படுவார்களோ என்ற அச்சம் வருகிறது.
எங்களின் குழந்தைப் பருவத்தில் டிவிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தாலே ‘கண்ணு என்னத்துக்கு ஆகும்? தள்ளி உட்கார்ந்து பாரு’ என்று திட்டுவார்கள். ஆனால் இந்தத் தலைமுறை ஸ்மார்ட்போனிலேயே தினமும் 8 மணிநேரம் வரை மூழ்கிக் கிடக்கிறார்கள். கரோனா அச்சத்தின் காரணமாக பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடும், விளையாட முடியாத சூழல் உள்ளது. இந்த சூழலில் ஆபத்தான ஸ்மார்ட் போனைக் குழந்தைகள் பார்த்துக்கொண்டே இருப்பதும் வேதனை தருகிறது. இதிலிருந்து இவர்களை மீட்பதற்கு எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை” என்றார்.
குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வியும், தொடர்ச்சியான ஸ்மார்ட்போன் பயன்பாடும் சிக்கலைத் தருமா? என்று நாகர்கோவிலை சேர்ந்த கண் மருத்துவர் சிவதாணுவிடம் கேட்டொம். "தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் பார்வைக் குறைபாடு வருமா, வராதா என்பது குறித்து அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், குழந்தைகள் ஆன்லைன் வகுப்பு, கேம்ஸ் எனத் தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன்களில் இருக்கும் போது தலைவலி, கண்களில் நீர்வடிதல், கண்கள் உலர்ந்து போதல், ஒரே இடத்தில் கவனம் செலுத்துவதில் பிரச்சினை போன்றவை நிச்சயம் ஏற்படும்.
இதனால் குழந்தைகள் வெளியுலக விளையாட்டு ஆர்வத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் சேர்த்தே இழக்கிறார்கள். ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் மட்டுமல்லாது, அதிகநேரம் லேப்டாப்பை உபயோகிக்கும் பெரியவர்களும்கூட 20:20:20 திட்டத்தைப் பயன்படுத்தி கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
இதுமிக எளிமையானதும்கூட. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை மடிக் கணினி, செல்போனில் இருந்து உங்கள் பார்வையை விலக்கி 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகள் பார்க்கவேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை குழந்தைகளை இதைச் செய்யச் சொல்வது ஸ்மார்ட்போன் அதிகநேரப் பயன்பாட்டு பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT