Published : 13 Jun 2020 12:25 PM
Last Updated : 13 Jun 2020 12:25 PM
தமிழகக் கேரள எல்லைக்குள் அன்றாடம் சென்று வருவதற்கு, விண்ணப்பித்த இரண்டே மணி நேரத்திற்குள் ‘அன்றாட இ-பாஸ்’ (Regular visit Pass) கிடைப்பதால் கேரள எல்லையில் வசிக்கும் விவசாய, வியாபார, தொழில் முனைவோர் மற்றும் கூலித் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
கோவை மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதிகளாக ஆனைகட்டி, வாளையாறு, நடுப்புணி, கோவிந்தாபுரம், வேலந்தாவளம், உழல்பதி, மூங்கில் மடை உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. இரு மாநில எல்லைக் கிராமங்களில் வசிப்பவர்கள், வியாபார நிமித்தம், வேலை நிமித்தம் எல்லை தாண்டி சென்று வருவது வழக்கம்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த நடைமுறை வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இரு மாநில எல்லைகளிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் உள்ள போலீஸார், யாரையும் அனுமதிக்க மறுத்து வந்தனர். தமிழ்நாட்டிலிருந்து பால், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் கேரளத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.
இதனால் தமிழகத்திற்குள் எப்போதும் போல சென்று வர அனுமதி கேட்டு கேரள எல்லையோர மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். குறிப்பாக, கடந்த வாரம் கேரளத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொள்ளாச்சி- கோவிந்தாபுரம் சோதனைச் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுகுறித்து, கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டியிடம் பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏவான பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். கேரள முதல்வருடன் கலந்தாலோசித்துவிட்டு முடிவு எடுப்பதாகக் கேரள அமைச்சர் வாக்குறுதியும் கொடுத்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் தற்போது மாநிலத்தின் இருபுறத்திலும் உள்ளவர்களுக்கு அன்றாடத் தொழிலுக்குச் சென்று வர இ-பாஸ் அனுமதியைப் புதிதாக வழங்குகிறது பாலக்காடு மாவட்ட நிர்வாகம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கேரளத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் பொதுச் செயலாளர் மா.பேச்சிமுத்து, “கோவைக்குச் சென்றுவர பாலக்காடு ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். முன்பு இ-பாஸ் எடுத்தாலும் வாளையாறு சோதனைச் சாவடி வழியாக மட்டும்தான் கேரளம் சென்று வர அனுமதி வழங்கப்பட்டது. இப்போது கொடுக்கப்பட்டுள்ள அன்றாட இ-பாஸ் மூலம் எந்த சோதனைச் சாவடி வழியாகவும் செல்ல முடியும். எந்தக் காரணத்துக்காகச் செல்கிறோம் என்பதைக் குறிப்பிட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தால், இரண்டே மணி நேரத்தில் இ-பாஸ் கிடைக்கிறது. இதற்காகப் பாலக்காடு ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.
அன்றாட இ-பாஸ் பெற்ற மோகன்குமார் என்பவர் கூறுகையில், ‘‘நான் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளேன். என் வீடு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் உள்ளது. வீடு தமிழகப் பகுதியிலும், கடை கேரளப் பகுதியிலும் இருப்பதால் என்னால் தொழிலுக்குச் செல்ல முடியவில்லை. இந்த நிலையில் கேரளத்தில் ஒரு மாதம் முன்பு பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்பட்டதால் பாலக்காடு ஆட்சியரிடம் முறைப்படி இ-பாஸ் விண்ணப்பித்துப் பெற்றேன். அதை வைத்து வாளையாறு சோதனைச் சாவடி வழியாக கொழிஞ்சாம்பாறை கடைக்குச் சென்று 14 நாள் என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டு பிறகு கடையை நடத்திவருகிறேன். இப்போது வரை கொழிஞ்சாம்பாறை கடையிலிருந்து ஆச்சிப்பட்டியில் உள்ள வீட்டிற்குச் செல்ல முடியவில்லை.
நேற்று அதற்கு விண்ணப்பிக்க இணையத்தில் முயற்சி செய்தபோது இந்த அன்றாட விசிட் பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. அதன்படி விண்ணப்பித்தேன். 2 மணி நேரத்தில் இந்தப் பாஸ் கிடைத்து விட்டது. இதில் மூன்று நாட்களுக்குள் சென்று வர அவகாசம் அளித்து அனுமதிக்கப் ட்டுள்ளது. இன்று உழல்பதி சோதனைச் சாவடி வழியாக இந்தப் பாஸை வைத்துத்தான் வீட்டிற்குச் சென்றுவர உள்ளேன். அதேசமயம், சோதனைச் சாவடியில் உள்ள போலீஸ்காரர்கள் இதை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டு அனுமதி வழங்குவார்கள் என்பது இனிமேல்தான் தெரியவரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT