Published : 13 Jun 2020 12:21 PM
Last Updated : 13 Jun 2020 12:21 PM
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஜூன் 13) அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் படுக்கை வசதிகளையும் அதிகப்படுத்தி வருகிறோம். கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டில் 500 படுக்கை வசதிகள் உள்ளன. ஸ்டான்லி மருத்துவமனையில் ஏற்கெனவே இருப்பதைவிட படுக்கை வசதிகளை இரட்டிப்பாக்கியிருக்கிறோம்.
ஏற்கெனவே 9,646 பணியாளர்களை முதல் கட்டத்தில் நியமித்தோம். 2,834 பணியாளர்களை இரண்டாவது கட்டமாக நியமித்து அவர்கள் பணியில் சேர்ந்திருக்கின்றனர். எல்லா மருத்துவமனைகளிலும் 40-60 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் பணியைத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு என் பாராட்டுகளும் நன்றியும். அவர்கள் பேரிடர் காலத்தில் ஆர்வத்துடன் களமிறங்கியிருக்கின்றனர்.
ஏற்கெனவே 4,893 செவிலியர்களை தமிழகம் முழுக்க நியமித்துள்ளோம். இன்றைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டும் 2,000 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 6 மாத காலத்திற்கு தற்காலிகப் பணியில் இருப்பார்கள். அவர்கள் இன்றே பணியில் இணைகிறார்கள். இவர்கள் சென்னையில் உள்ள 5 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா 400 செவிலியர்கள் என நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் செவிலியர்கள் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கூடுதலாக நடமாடும் மருத்துவக் குழுக்கள், பள்ளி சிறார்களுக்கான மருத்துவக் குழுக்கள் உள்ளன. 254 வாகனங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பாரா மெடிக்கல் பணியாளர்கள், மருந்து, மாத்திரைகளுடன் சென்னை மாநகராட்சிக்கு இன்று அர்ப்பணிக்கப்படுகிறது. இதனால் எந்த புதிய தொற்றும் வர வாய்ப்பு இல்லை. வீடு, வீடாகக் கண்காணிப்பு சென்னையில் தொடர்கிறது. இந்த 254 குழுக்கள் நோய்த்தடுப்புப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொள்வர். இந்தக் குழுக்களில் உள்ளவர்கள் ஏற்கெனவே சென்னை வெள்ளத்தின்போது தன்னார்வலர்களாகப் பணியாற்றியவர்கள். இந்த வாகனங்களை இப்போது தொடங்கி வைத்துள்ளோம். இதனால், சென்னையில் நோய்த்தடுப்பு, கட்டுப்படுத்தும் பணிகள் மேம்படுத்தப்படும்"
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அப்போது, சென்னையில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் 6 லட்சத்து 40 ஆயிரம் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். மகாராஷ்டிராவில் 5 லட்சத்து 90 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். ராஜஸ்தானில் 5.4 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். ஆந்திராவில் 5 லட்சம், கர்நாடகா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் 4 லட்சம், மேற்கு வங்கத்தில் 3 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம் நோய்த்தடுப்பை தீவிரப்படுத்த முடியும்" என்றார்.
இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு சரியான சிகிச்சை அளிப்பதில்லை என, அரசு மருத்துவர்கள் சங்கம் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்துப் பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் இன்னொரு பேட்டியையும் அளித்திருக்கிறார். மருத்துவர்களை அதிகமாக நியமித்ததற்கு நன்றி தெரிவித்திருக்கிறார். மருத்துவர்களை நல்ல உணவகங்களில் தங்க வைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார். முழு உடல் பாதுகாப்புக் கவசம் அணிந்து பணியாற்றும்போதும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT