Published : 13 Jun 2020 09:36 AM
Last Updated : 13 Jun 2020 09:36 AM

இந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகள் நேரும்; வைகோ

வைகோ: கோப்புப்படம்

சென்னை

இந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகள் நேரும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 13) வெளியிட்ட அறிக்கை:

"உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் டெல்லியைச் சேர்ந்த நமஹா என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், 'அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் தேசத்துக்கான இந்தியா எனும் பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டது. 'இந்தியா' என்ற பெயர் இன்னும் குறியீடாகவும், சொந்த மக்களுக்குப் பெருமையாகவும் இருக்கிறது. ஆனால் 'இந்தியா' எனும் பெயரை மாற்றி, 'பாரத்' என்று அழைக்கும்போது சுதந்திரத்துக்காகப் போராடிய முன்னோர்களுக்குப் பெருமைச் சேர்க்கும் விதமாக அமையும். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை நாம் கடந்துவிட்டோம் என்பதற்கு 'பாரத்' அல்லது 'இந்துஸ்தான்' பெயரை அங்கீகரிக்கும் நேரம் வந்துவிட்டது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, 'இந்தியா' எனும் பெயரை 'இந்துஸ்தான்' அல்லது 'பாரத்' என்று மாற்ற மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு ஜூன் 3, 2020 அன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 'மனுதாரர் தனது மனுவின் நகலை மத்திய அரசின் சம்பந்தப்பட்டத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனை கோரிக்கை மனுவாகக் கருதி மத்திய அரசு முடிவு எடுக்கும்' என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்ற ஒரு மனு 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், 'இந்தியா அல்லது 'பாரத்' என்று அழைப்பது அவரவர் விருப்பம். நாட்டின் பெயரை மாற்றுமாறு கட்டளையிடுவது உச்ச நீதிமன்றத்தின் பணி அல்ல' என்று மனுவைத் தள்ளுபடி செய்தார்.

தற்போது மீண்டும் அதே கோரிக்கையைப் பொதுநல வழக்காக தாக்கல் செய்திருப்பதும், அதனை உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்திருந்தாலும், மத்திய அரசின் தொடர்புள்ள அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும், மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. இதன் பின்னணிதான் பல ஐயப்பாடுகளை எழுப்புகிறது.

இந்திய அரசியல் நிர்ணய சபையில் விவாதித்து, 'அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 1 (1) இன் படி 'பாரத்' என்ற 'இந்தியா' மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்' என்று பிரகடனம் செய்யப்பட்டது.

இந்திய அரசியல் நிர்ணய சபையில், 'இந்துஸ்தான்' என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்ததும், மறைக்க முடியாத வரலாறு ஆகும்.

இந்நிலையில், இந்துத்துவ சனாதன ஆதிக்க சக்திகளின் பிடியில் நாடு சிக்கியிருக்கின்ற இந்த நேரத்தில், நாட்டின் பெயரையே மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதும், அதற்கு உச்ச நீதிமன்றத்தைத் துணைக்கு அழைப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

அண்ணா அவர்கள்1962 ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் சுட்டிக் காட்டியது போல, இந்தியா ஒரு நாடு அல்ல, இணைக்கப்பட்ட துணைக் கண்டம் என்பதை பாஜக ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முயற்சிப்பதும், ஆட்சி அதிகாரத்தை அதற்காக பயன்படுத்துவதும் கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.

இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள் வாழும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. ஆங்கிலேயர்களின் துப்பாக்கி முனைதான் இந்தியா என்ற நாட்டை கட்டமைத்தது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவிரெட்டி கூறிய கருத்தை மத்திய பாஜக அரசுக்கு நினைவூட்டுகிறேன்.

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டுமெனில், 'இந்திய ஐக்கிய நாடுகள்’ என்று மாற்றுவதுதான் பொருத்தமாகவும், கூட்டாட்சி கோட்பாட்டுக்கு வலு சேர்ப்பதாகவும் அமையும். அதைவிடுத்து, இந்துத்துவ சனாதன சக்திகள் தங்கள் விருப்பம் போல் நாட்டின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்"

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x