Published : 12 Jun 2020 07:33 PM
Last Updated : 12 Jun 2020 07:33 PM

கல்விக் கட்டணம், பள்ளிகள் திறப்பு, தனியார் மருத்துவமனை சிகிச்சை விவகாரம்: முதல்வர் பழனிசாமி பதில்

கல்விக் கட்டணப் பிரச்சினை, பள்ளிகள் எப்போது திறக்கப்படும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக் கட்டணம், தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.

மேட்டுர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட்ட பின் செய்தியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி:

கல்விக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தகவல் வரப் பெறுகிறதே?

அதுகுறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பள்ளியில் இவ்வளவு கட்டணம் கட்டச் சொல்கிறார்கள் என்று பெற்றோர்கள் புகார் கொடுத்தால்தான் அந்தப் புகாரின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும். பத்திரிகை மற்றும் ஊடகம் வாயிலாக முதலமைச்சராகிய நானே தெரிவிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்தால், அந்தப் பள்ளியின் மீது அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்கள் குறித்து?

இது மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம். அதைவிட குறைவாகத்தான் நாங்கள் நிர்ணயித்திருக்கிறோம். மருத்துவர்கள் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுதான் நோய் பரிசோதனை செய்கிறார்கள். இன்றைக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அப்படி தொற்று ஏற்பட்டால் அந்த மருத்துவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள்தான் சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படி மருத்துவர்கள் சிகிச்சை செய்ய வேண்டுமென்றால், மருத்துவ சங்க நிர்வாகிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அதனடிப்படையில் தான், மத்திய அரசு கட்டணம் நிர்ணயித்திருக்கிறது. நாம் அதைவிடக் குறைந்த கட்டணம்தான் நிர்ணயித்திருக்கிறோம்.

தனியார் மருத்துவமனையைக் கையகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதே?

எப்படிக் கையகப்படுத்துவீர்கள்? இது ஜனநாயக நாடு, சர்வாதிகார நாடு அல்ல. நீங்கள் எப்படி கேள்வி கேட்பதற்கு உரிமை இருக்கின்றதோ, அதுபோல அவர்கள் மருத்துவமனையை நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. யாரும் தடுக்க முடியாது. சிகிச்சை செய்யச் சொல்லலாம், சிகிச்சை கட்டணத்தை நிர்ணயிக்கலாம்.

பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவெடுத்துள்ளதா?

மத்திய அரசு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்படும். கரோனா வைரஸ் தொற்று இருக்கும்பொழுது இதை அறிவித்தால் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்திற்குச் செல்வார்கள், பிரச்சினைகள் வரும். எனவே, தொற்று படிப்படியாக குறைக்கப்பட்ட பிறகு கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையெல்லாம் ஆராய்ந்து அரசு முடிவு செய்து அறிவிக்கும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x