Published : 12 Jun 2020 03:07 PM
Last Updated : 12 Jun 2020 03:07 PM
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 11) வழக்குகளை விசாரித்து முடித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு, தமிழக அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், பாதிப்பு அதிகமாகி வருவதால் சென்னையில் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என அரசிடம் தகவல் பெற்றுத் தெரிவிக்க அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று (ஜூன் 12) தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
“சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை. மருத்துவ நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் அவ்வப்பொழுது முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொற்றுப் பரவலைத் தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கரோனா அறிகுறி இருந்தால் மக்கள் தாங்களாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும். கரோனா தொற்றை ஒரு களங்கமாக மக்கள் பார்க்கக் கூடாது. அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கரோனாவின் தீவிரத்தை உணராத பலர் முகக்கவசம் கூட அணியாமல் இருக்கின்றனர்” என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன் வேதனை தெரிவித்தார்.
நீதிபதிகள் குறுக்கிட்டு, சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் நிறுத்தப்பட்டுள்ளதாக பரவும் தகவல் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதை முழுமையாக மறுத்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், அந்தத் தகவல் முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்றும், வதந்தியாக பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார். முறையாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இ-பாஸ் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
சென்னையில் ஊரடங்கில் தளர்வு வழங்காமல் கண்டிப்புடன் அமல்படுத்தக் கோரி வழக்கறிஞர் தமிழரசு என்பவர் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள வழக்குடன் விசாரிப்பதற்காக ஜூன் 15-ம் தேதி விசாரணையை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT