Published : 11 Jun 2020 07:36 PM
Last Updated : 11 Jun 2020 07:36 PM

கரோனா தடுப்பு: முன்னுதாரணமாகத் திகழும் பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்கிய சார் பதிவாளர் அலுவலர்கள்.

கோவை

கரோனா காலத்துக் கட்டுப்பாடுகளுடன், மக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர், நிலவேம்புக் கசாயம் உள்ளிட்டவற்றை வழங்கி, தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றி முன்னுதாரணமாகத் திகழ்கிறது கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம்.

தமிழகத்தில் உள்ள 547 சார் பதிவாளர் அலுவலகங்களும், கரோனா கட்டுப்பாடுகளுடன் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகம் முன்மாதிரி அலுவலகமாகச் செயல்படுகிறது.

இதுகுறித்து சார் பதிவாளர்கள் ஆதிமூலம் ராமமூர்த்தி, பூபதிராஜ் ஆகியோர் கூறும்போது, "அரசின் அறிவுறுத்தலை ஏற்று, உரிய வழிகாட்டுதல்கள்படி பத்திரப் பதிவு அலுவலகம் செயல்படுகிறது. பதிவுப் பணிக்காக அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றி பதிவு மேற்கொள்கின்றனர்.

சானிடைசர் தானியங்கி இயந்திரம் மூலம் கைகளைச் சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு தினமும் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் கசாயம் மிளகு, இஞ்சி மற்றும் எலுமிச்சை கலந்த சுடுநீர் வழங்கப்படுகிறது.

மேலும், பதிவுக்கு வரும் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு, அதில் பாதுகாப்பாக அமர வைக்கப்படுகின்றனர். மேலும், அவர்களுக்கு முகக்கவசமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

அலுவலக வாயிலில் நுழையும் முன் வெப்பநிலை பரிசோதனைக் கருவி மூலம், காய்ச்சல் இருக்கிறதா என சரிபார்த்த பின்னரே, அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், சமூக அக்கறையுடனும், முன்னுதரணமாகவும் பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம் விளங்குகிறது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x