Last Updated : 11 Jun, 2020 05:40 PM

1  

Published : 11 Jun 2020 05:40 PM
Last Updated : 11 Jun 2020 05:40 PM

நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டிருந்தால் மக்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்! - உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.இ.ரகுநாதன் பேட்டி  

கே.இ.ரகுநாதன்

கரோனா பொதுமுடக்கத்தின் விளைவாகக் கடும் பாதிப்பைச் சந்தித்த பொருளாதாரத்தை மீட்க, 20 லட்சம் கோடி ரூபாய்க்கான சலுகைத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து ஒரு மாதமாகப் போகிறது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பிணையின்றி 3 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் வழங்குவதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார். பொதுமுடக்கத்தில் படிப்படியாகத் தளர்வுகளும் அமலுக்கு வந்திருக்கின்றன.

இந்நிலையில், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எந்த அளவுக்கு மீண்டிருக்கின்றன என்பது குறித்து, அகில இந்திய உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.இ.ரகுநாதனிடம் பேசினோம்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கடனுதவி வழங்குவதற்கான உத்தரவாதத்தை அரசு அறிவித்தது. நடைமுறையில் அது எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது?

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு சார்பில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி அறிவிக்கப்பட்டது. 45 லட்சம் பயனாளிகளுக்கானது அது. நேற்று அரசு அறிவித்திருப்பதன்படி, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் 22 ஆயிரம் பேர் பலனடைந்திருக்கிறார்கள். மொத்தமாகப் பார்த்தால் 3 சதவீதம் பேருக்குத்தான் பலன்கள் சென்றடைந்திருக்கின்றன.

நடைமுறைச் சிக்கல்கள்தான் இதற்குக் காரணம். ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் இருக்கும் சிக்கல்களை முதன்மையாகச் சொல்லலாம். நிறுவனங்கள் ஏற்கெனவே வாங்கியிருந்த கடன்களுக்காக ஏதேனும் சொத்துகளை அடமானமாகக் கொடுத்திருந்தால், அவற்றை இந்தக் கடன்களுக்காகவும் சேர்த்துவிடுவதாகப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடன் வாங்கினால் அசலையோ, தவணையையோ திருப்பிச் செலுத்துவதற்கு லாபம் அவசியம். தற்போது அரசு அறிவித்திருக்கும் கடனுதவி என்பது, புதிதாகத் தளவாடங்களை வாங்குவதற்கானதோ, சந்தைப்படுத்துவதற்கானதோ அல்ல. இருக்கும் செலவுகளைச் சமாளிப்பதற்காகத்தான் இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதனால்தான் பலரும் கடன் வாங்கத் தயங்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் அரசின் நிபந்தனைகளின்கீழ் அடங்காது என்பதால், அந்நிறுவனங்களும் கடனைப் பெற முடியாத சூழலில் இருக்கின்றன.

கடன் வழங்கும் விஷயத்தில் ரிசர்வ் வங்கி இன்னமும் விதிமுறைகளை அறிவிக்கவில்லை என்று சில வங்கிகள் சொல்வதாகப் புகார்கள் வருகின்றனவே?

ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை இதற்கான விதிமுறைகளைத் தெளிவாக அறிவித்துவிட்டது. பொதுத் துறை நிறுவனங்களும் விதிமுறைகளை அறிவித்திருக்கின்றன. சில தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் இன்னமும் எதையும் அறிவிக்கவில்லை. போதிய நிதி இல்லாத வங்கிகள் கடன்களை வழங்க முன்வரவில்லை. சில வங்கிகள் 'ரிஸ்க்' எடுக்கத் தயங்குகின்றன.

பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விஷயத்தில் தமிழகத்தின் நிலவரம் என்ன?

தமிழகம் ஒரு தொழில் துறை மாநிலம். இங்கு ஆட்டோமொபைல், ஜவுளி ஏற்றுமதி, தோல் பதனிடுதல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, சிவகாசியை மையமாகக் கொண்டு இயங்கும் பட்டாசுத் தொழில், தீப்பெட்டி உற்பத்தித் தொழில், அச்சுத் தொழில் போன்ற தொழில்கள் பிரதானமாக இயங்கிவருகின்றன.

இந்தியாவின் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் கிட்டத்தட்ட 33 சதவீதம் தமிழகத்தின் பங்கு ஆகும். தற்போது கரோனா தொற்று கடுமையாக இருப்பதால், பெரும்பாலான தொழில் நிறுவனங்களைக் கொண்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிலைமை இன்னமும் சீரடையவில்லை. ஒருவித அச்சம் நிலவுவதை உணர முடிகிறது.

25 சதவீதம் தொழிலாளர்களை வைத்துக்கொண்டுதான் இயங்க வேண்டியிருக்கிறது. இதனால், முழுமையான உற்பத்திக்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை. சென்னை இயங்கவில்லை என்றால் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் உள்ள தொழில் நிறுவனங்களால் முழு வீச்சுடன் இயங்க முடியாது. இதுதான் தமிழகத்தின் நிலைமை!

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்ட நிலையில், பல நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. சில நிறுவனங்கள் கல்லூரி மாணவர்களை வைத்து வேலை வாங்குவதாகச் செய்திகள் வெளியாகின்றன. இந்தப் பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது?

தமிழகத்தைப் பொறுத்தவரை திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஆம்பூர், ராணிப்பேட்டை போன்ற நகரங்களில் உள்ள தோல் தொழிற்சாலைகள், உணவகங்கள், 'ஸ்பா' போன்றவற்றில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்துவந்தனர். தொழில் நிறுவனங்களில் சுமைகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற திறன் தேவைப்படாத வேலைகளுக்கும் அவர்கள்தான் பயன்படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் இல்லாததால், தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன.

சில நிறுவனங்கள் கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்திக்கொள்வது என்பது தற்காலிக ஏற்பாடாக இருக்கலாம். கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் அவர்கள் அங்கு பணிபுரியப்போவதில்லை.

சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்ட புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் அழைக்கும் விஷயத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் சார்பில் ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா?

நிச்சயமாக. புலம்பெயர் தொழிலாளர்கள் இன்றியமையாதவர்கள் என்பதால், நாங்கள் அதைச் செய்துதான் ஆக வேண்டும். ஆனால், அவர்கள் தற்போதைக்குத் திரும்பி வரத் தயாராக இல்லை. இந்த நிலைமை மாற குறைந்தது 3 மாதங்கள் ஆகலாம் என்று தோன்றுகிறது. இப்போதுதான் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருக்கிறார்கள் என்பதால், உடனடியாக அவர்களால் திரும்ப முடியாது. மேலும், ஊர் திரும்பும்போது அவர்கள் எதிர்கொண்ட துயரங்கள் அவர்கள் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

மேலும், தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், திரும்பி வருவதற்கு அவர்கள் அச்சப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, அவர்களை மீண்டும் அழைத்துக்கொள்ள தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசுகள் என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
சொந்த ஊர் திரும்ப விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் டிக்கெட், போக்குவரத்து செலவை ஏற்பதாக அரசு அறிவித்தபோது நாங்கள் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்தோம். 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கையில் பணம், உணவு, உறைவிடம் போன்றவை இல்லாத சூழலில், வேறு வழியின்றிதான் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவெடுத்தார்கள்.

எனவே, அவர்களுக்கு 5,000 ரூபாய், உணவு, உறைவிடம் போன்றவற்றைத் தருவது அல்லது திரும்பிச் செல்வதற்கான செலவை ஏற்பது என்று இரண்டு தெரிவுகளை அரசு தொழிலாளர்கள் முன் வைக்க வேண்டும் என்று நாங்கள் கோரினோம்.

உண்மையில் அப்படி ஒரு வாய்ப்பை அரசு தந்திருந்தால், 50 அல்லது 60 சதவீதம் பேர் திரும்பிச் சென்றிருக்க மாட்டார்கள் என்பது எனது கருத்து.

ஆனால், பல நிறுவனங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்காததால், பசியும் பட்டினியுமாக அவர்கள் ஊர் திரும்ப வேண்டிவந்தது எனும் குற்றச்சாட்டும் இருக்கிறதே?
அந்தக் குற்றச்சாட்டு நியாயமானதுதான். 'இத்தனை வருடங்களில் நிறுவனங்கள் நிறைய சம்பாதித்திருக்கும். ஒரு நெருக்கடியான தருணத்தில் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாதா?' எனும் முக்கியமான விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

நிறுவனங்களால் நிச்சயம் சம்பளத்தைக் கொடுத்திருக்க முடியும். ஆனால், வேறொரு சிக்கல், அதற்கு வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது. மார்ச் மாத மத்தியில்தான் கரோனா பிரச்சினை பெரிய அளவில் வெடித்தது. பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை மார்ச் மாதம் என்பது மிக முக்கியமான தருணம்.

எங்கள் கையில் இருந்த பணத்தையெல்லாம் தளவாடங்கள் வாங்குவது, உற்பத்தி ஆகியவற்றில் முதலீடு செய்துவிட்டோம். பொதுமுடக்க நடவடிக்கையை 4 மணி நேர அவகாசத்தில் அரசு அமல்படுத்திவிட்டது. அதுவும் அலுவலக நேரத்துக்குப் பின்னர்தான் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, வர வேண்டிய இடங்களிலிருந்து பணத்தை வசூலிக்கவோ, ரொக்கமாக்கவோ அவகாசம் இன்றி எல்லா நிறுவனங்களும் ஸ்தம்பித்துவிட்டன.

குறைந்தபட்சம் 10 நாட்கள் அவகாசம் கிடைத்திருந்தால் அடுத்த 6 மாதங்களுக்கு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க முடியும். எங்கள் கைகள் கட்டப்பட்டுவிட்டன என்பதுதான் நிதர்சனம்!

மத்திய - மாநில அரசுகளிடமிருந்து வேறென்ன நடவடிக்கைகள் / சலுகைகளை எதிர்பார்க்கிறீர்கள்?

கடன் வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். அரசு தரப்பிலிருந்தும் அரசு சார் நிறுவனங்களிடமிருந்தும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வர வேண்டிய 5 லட்சம் கோடி ரூபாயை வழங்க வேண்டும்.

அதேபோல, அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய வருமான வரி, ஜிஎஸ்டி, டிடிஎஸ், வருங்கால வைப்பு நிதி போன்ற தொகைகளுக்குக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு விலக்கு அளித்துவிட்டால், ஓரளவு மீண்டுவிடலாம் என்றும் கோரினோம்.

இவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் அரசு ஒப்புக்கொண்டது. அவற்றிலும் நடைமுறைப் பிரச்சினைகள் வேறு. இப்படியான ஒரு நெருக்கடியின்போது அரசு முதலில் காப்பாற்ற வேண்டியது மக்களைத்தான்; தொழில் நிறுவனங்கள் இரண்டாம்பட்சம்தான் என்பதை நாங்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம். அதேசமயம், நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டிருந்தால், தங்களைச் சார்ந்திருப்பவர்களை நிறுவனங்கள் காப்பாற்றியிருக்கும் என்பதையும் பதிவுசெய்ய விரும்புகிறேன்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x