Published : 11 Jun 2020 05:01 PM
Last Updated : 11 Jun 2020 05:01 PM
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிக்காக, தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதிகளில் பணியாற்றும் பணியாளர்களை வரவழைக்கக் கூடாது என தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னை, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு திமுக எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் இன்று (ஜூன் 11) அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் சுமார் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை மாத இறுதிக்குள் சுமார் 1.5 லட்சம் பேர் பாதிக்கப்படவுள்ளதாக எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வில் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 125 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாநகராட்சியில் நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சுகாதார ஆய்வாளர்களை சென்னைக்குப் பணிக்கு அனுப்பப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சென்னை மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பலர் சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் மூலம் தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருப்பதால், தஞ்சாவூரில் நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூரில் பணியாற்றுபவர்களை சென்னைக்கு அழைத்துச் சென்றால் தஞ்சாவூரில் சுகாதாரப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டு, அதிக அளவில் கரோனா நோய்த் தொற்று பரவும், எனவே தஞ்சாவூர் மாநகராட்சிப் பணியாளர்களைத் தொடர்ந்து தஞ்சாவூரிலேயே பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு நீலமேகம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT