Published : 11 Jun 2020 12:45 PM
Last Updated : 11 Jun 2020 12:45 PM
சென்னையில் கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருவதால் சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிடக் கோரி பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழரசு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “இந்தியாவில் ஜூன் 8-ம் தேதி நிலவரப்படி, ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 981 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 429 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், தொற்றுக்கு 7 ஆயிரத்து 200 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 8-ம் தேதி வரை, 33 ஆயிரத்து 229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 286 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளபோதும், சென்னையில் தொற்று தீவிரம் அதிகமாக இருக்கும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. சென்னையில் மட்டும் 23 ஆயிரத்து 298 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால், சென்னையில் ஊரடங்கைத் தளர்த்துவதற்குப் பதில், ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT