Published : 11 Jun 2020 11:53 AM
Last Updated : 11 Jun 2020 11:53 AM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; உயர் நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல்: வழக்குகள் முடித்துவைப்பு

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததை அடுத்து தேர்வை முழுவதுமாக ரத்து செய்தது அரசு. அது தொடர்பான அரசாணையைத் தாக்கல் செய்ததால் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளிவைக்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசும், கரோனா தொற்று தீவிரமடைவதால் தேர்வைத் தள்ளிவைப்பது வைப்பது அவசியமா என பெற்றோரும் பரிசீலிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து, தேர்வு தொடர்பான வழக்கை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 15-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டன.

தேர்வை ஒத்திவைக்கக் கோரி மாணவர் சங்கம், ஆசிரியர் சங்கம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் கடந்த வாரம் நடந்த வழக்கு விசாரணையில் பரபரப்பாக வாதங்கள் வைக்கப்பட்டன.

வழக்கு விசாரணையில் நீதிபதிகள், “9 லட்சம் மாணவர்களின் உயிர் மீது ரிஸ்க் எடுக்கக் கூடாது. மாணவர்கள் வந்து செல்வதில் உள்ள பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். தேர்வை ஏன் தள்ளிவைக்க கூடாது. ஜூலை மாதத்தில்தான் பள்ளிகள் திறப்பதை ஆலோசிக்க வேண்டுமென மத்திய அரசு வழிகாட்டியுள்ள நிலையில் ஜூன் மாதத்துக்குள் ஏன் அவசரம் காட்டப்படுகிறது” என அரசுத் தரப்புக்குக் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “வரும் நாட்களில் தமிழகத்தில் 2 லட்சம் பேர் வரை கரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும் என மருத்துவ நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளனர். அதனால், பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்பதால் தேர்வுக்குத் தடை விதிக்கக் கூடாது. அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வு நடத்தப்பட வேண்டும்” என வாதிட்டார்.

''தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, பின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள். மாணவர்கள் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதைத் தவிர, மாணவர்கள் உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்'' என நீதிபதிகள், அரசுத் தரப்புக்குக் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து விரிவான கூடுதல் அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன், இந்த வழக்கையும் சேர்த்து ஜூன் 11-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவித்தார். இதையடுத்து இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான அரசாணையை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதைப் பதிவு செய்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வு வழக்குகளை முடித்து வைத்தது.

இந்திய மாணவர் சங்க நிர்வாகி மாரியப்பன், ஈரோட்டைச் சேர்ந்த மாணவியின் தந்தை மாரசாமி, கடலூரைச் சேர்ந்த இளங்கீரன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் பக்தவச்சலம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x