Published : 11 Jun 2020 06:47 AM
Last Updated : 11 Jun 2020 06:47 AM
தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி கிரீன் நிறுவனம் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி திட்டத்துக்காக ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது.
இந்திய சோலார் ஆற்றல் கழகத்தின் சோலார் மின் உற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தத்தைஅதானி கிரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த உற்பத்தி திறன் 8 ஜிகாவாட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2 ஜிகாவாட் சோலார் செல் உற்பத்தி திட்டத்தையும் செயல்படுத்த உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.45 ஆயிரம் கோடி ஆகும்.
இந்த சோலார் மின் உற்பத்தி திட்டம் மிகப்பெரியதாக இருக்கும் என அதானி கிரீன் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறியுள்ளது.
இதுகுறித்து கவுதம் அதானி கூறும்போது, “கடந்த 2015-ல் காலநிலை மாற்றம் தொடர்பாக பாரிசில் நடந்த ஐ.நா. மாநாட்டில்பிரதமர் நரேந்திர மோடி காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க இந்தியா குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்று உறுதியளித்தார். அதன்படி இந்த சோலார் மின் உற்பத்தி திட்டம் மிக முக்கிய முன்னெடுப்பாகும். இந்திய சோலார் ஆற்றல் கழகம் அதானி கிரீன் நிறுவனத்தைத் தேர்வு செய்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது” என்றார்
அதானி கிரீன் நிறுவனம் 2025-க்குள் 25 ஜிகாவாட் சோலார்மின் உற்பத்தியை இலக்கு வைத்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும் என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டினால் உலகின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிறுவனமாக அதானி கிரீன் நிறுவனம் இருக்கும். தற்போது அதானி கிரீன் வசம் இருக்கும் சோலார் மின் உற்பத்தி திட்டத்தின் திறன் 6 ஜிகாவாட் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT