Published : 10 Jun 2020 03:42 PM
Last Updated : 10 Jun 2020 03:42 PM
சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு அனுமதியின்றி வந்த மணமகன் உள்ளிட்ட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.
கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டியில் உள்ள காவல் சோதனைச்சாவடியில் நேற்று இரவு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்வேல், வருவாய் ஆய்வாளர் பொன்னம்மாள் மற்றும் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், 7 பேர் இருந்தனர். கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அவர்கள் அனுமதியின்றி வந்தது தெரியவந்தது.
மேலும், காரில் இருந்த 32 வயது இளைஞருக்கும், கோவில்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கழுகுமலை கோயிலில் திருமணம் நடத்த முடிவெடுத்திருந்தனர்.
ஆனால், கோயில் திறக்கப்படாததால், வீட்டிலேயே திருமணத்தை நடத்த முடிவெடுத்து வந்தது தெரியவந்தது. ஆனால், உரிய அனுமதியில்லை என கூறி, அவர்களை அனுமதிக்க போலீஸார் மறுத்தனர்.
இதையடுத்து நாங்கள் சென்னைக்கு திரும்பச் செல்கிறோம் எனக் கூறியதைத் தொடர்ந்து அவர்களை செல்ல அனுமதித்தனர். ஆனால், அவர்கள் அதிகாரிகளுக்குத் தெரியாமல் ஆவல்நத்தத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து, வட்டாட்சியர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் அலுவலர்கள் ஆவல்நத்தம் கிராமத்துக்கு சென்று, மணமகன் உள்ளிட்ட 7 பேரையும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT