Published : 10 Jun 2020 01:27 PM
Last Updated : 10 Jun 2020 01:27 PM
தமிழகத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த அன்பழகன் சில நாட்களுக்கு முன் கரோனாவைப் பற்றிய தனது கடைசிப் பேட்டியில் பொதுமக்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், தனித்திருக்க வேண்டும், அவ்வாறு இருந்தால் கரோனா நோய்த் தொற்றிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தார்.
கரோனா நோய் யாரையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கு உதாரணமாகப் பலரும் இருக்கும் நிலையில் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர், திமுக மூத்த நிர்வாகி ஜெ.அன்பழகனின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் கரோனா காலத்தில் மக்களிடையே இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இதில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த முதல் அரசியல்வாதியாக அன்பழகனின் மரணம் நிகழ்ந்துள்ளது. தனது உடலில் உள்ள பிரச்சினைகளை அறிந்தே இருந்த ஜெ.அன்பழகன் மற்றவர்களுக்கும் கரோனாவிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வந்தார்.
மருத்துவர் எச்சரிக்கையையும் மீறித்தான் நான் பணி செய்கிறேன் என அவர் கடைசிப் பேட்டியில் தெரிவித்திருந்தார். கரோனா அவ்வளவு எளிதில் அழியாது என கடைசிப் பேட்டியில் அன்பழகன் கூறியிருந்தார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்ததாவது:
“எதற்காக ஒட்டுமொத்தமாக ஊரடங்கு செய்கிறோம் என்றால் இந்த நோயின் தன்மை 20 நாட்கள் அவர்கள் உடம்பில் இருக்கும், நோயுற்றவர்களைத் தனித்திருக்க வைக்கிறோம். தனித்திருந்தால் நோயிலிருந்து வெளிவந்துவிடலாம். மற்றவர்களுக்கும் பரவாது. அது கடந்தும் 6 மாதத்திற்காவது முகக்கவசம் அணிய வேண்டும். எனக்கு 62 வயது ஆகிறது.
எனக்குத் தெரிந்து உலகம் முழுவதும் நோய்ப் பரவல், அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு வருகிறது என்பதற்காக மருத்துவர்கள் எனக்குக் கூறிய அறிவுரை வெளியில் எங்கும் செல்லாதீர்கள் என்பதுதான். ஆனால், நானே கூட தினம் ஒரு நிகழ்ச்சி என்கிற அளவில் கலந்துகொண்டு வீடு திரும்புகிறேன்.
மக்களுக்கு நான் கூறுவது இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே எச்சரிக்கையாக இருங்கள். எச்சரிக்கையாக இருப்பது என்பது தள்ளி நிற்பது. தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். தனித்திருங்கள். தனித்திருந்தால் இந்த நோயை விரட்ட முடியும். இருமல், தும்மல் இருப்பவர்கள் மத்தியிலிருந்து விலகி இருங்கள், முகக்கவசம் கட்டாயம் அணியுங்கள். உங்கள் குடும்பத்தார் தவிர மற்றவர்களிடமிருந்து விலகி இருங்கள், அவ்வாறு இருந்தால் இந்த நோயிலிருந்து தப்பிக்கலாம்”.
இவ்வாறு அன்பழகன் பேட்டி அளித்துள்ளார்.
கரோனா தொற்று குறித்து நன்கு அறிந்தே இருந்த அன்பழகன், பொதுச்சேவை காரணமாக அவர் சொன்னதை அவரே கடைப்பிடிக்க முடியாமல் போனதுதான் சோகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT