Published : 10 Jun 2020 12:21 PM
Last Updated : 10 Jun 2020 12:21 PM

தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்களது வேலைத்திறன் மற்றும் முன் அனுபவங்களைக் கண்டறிந்து தகுதிக்கேற்ப தனியார் துறைகளில் பணிவாய்ப்பினைப் பெற உதவவும், திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்தும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் செய்திக் குறிப்பு:

“தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமானது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களது திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு குறுகிய கால திறன் பயிற்சிகளை அளித்து அவர்களது வேலைபெறும் திறனை அதிகரித்து அதன் மூலம் தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்று வழங்கும் சேவையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தற்போது கரோனா நோய்த்தொற்று உலக அளவில் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்களது வேலைத்திறன் மற்றும் முன் அனுபவங்களைக் கண்டறிந்து தகுதிக்கேற்ப தனியார் துறைகளில் பணிவாய்ப்பினைப் பெற உதவுவதற்கும், திறன் பயிற்சி தேவைப்படும் நேர்வுகளில் அவர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி தனியார் துறை நிறுவனங்களில் பணி வாய்ப்பினைப் பெற உதவுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டு வருகின்றது.

வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பினைப் பெற உதவுவதற்கென, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் இணையதளத்தில் (https://www.tnskill.tn.gov.in) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளப் பக்கத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் விஷ்ணு தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x