Published : 22 May 2014 10:30 AM
Last Updated : 22 May 2014 10:30 AM
சென்னை, மதுரை, கோவை, ராமேஸ்வரம் உள்பட நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள தங்கும் அறைக்கு ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட் மற்றும் ஆர்ஏசி டிக்கெட் வைத்திருப்போர் ஆன்-லைனில் தங்கும் அறையைப் பதிவு செய்யலாம்.
அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கோவை, அகமதாபாத், அலகாபாத், அமேதி, புவனேஸ்வர், மும்பை சென்ட்ரல், உள்பட 67 ரயில் நிலையங்களில் உள்ள தங்கும் அறைகளுக்கு ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம். சென்ட்ரலில் 8 ஏசி தங்கும் அறைகள் உள்ளன. வாடகை ரூ. 825. விஐபி அறை வாடகை ரூ. 1393.
இந்த ரயில் நிலையங்களில் ஆன்-லைனில் தங்கும் அறையை பதிவு செய்வதற்காக அங்கே கம்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதோடு www.railtourismindia.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். இதன்படி 60 நாட்களுக்கு முன்னதாக தங்கும் அறையைப் பதிவு செய்ய முடியும். உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் அல்லது ஆர்.ஏ.சி. டிக்கெட்டின் (இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்) பி.என்.ஆர். எண் மற்றும் புறப்படும் இடம், போய்ச்சேரும் இடத்தைக் குறிப்பிட்டு தங்கும் அறையை பதிவு செய்யலாம்.
முன்பதிவு இல்லாத டிக்கெட் வைத்திருப்போர், ரயில்வே பாஸ் வைத்திருப்போர், டிக்கெட் தவிர இதர ஆவணங்களுடன் பயணம் செய்வோர் ரயில் நிலையங்களில் உள்ள கம்ப்யூட்டரில் மட்டும் 2 நாட்களுக்கு முன்னதாக தங்கும் அறையைப் பதிவு செய்ய முடியும். இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள ரயில் நிலையங்களின் பட்டியலில் சேலம், திருச்சி, நெல்லை, எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் சேர்க்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் இந்த ரயில் நிலையங்களையும் தங்கும் அறைக்கான ஆன்-லைன் புக்கிங் பட்டியில் சேர்க்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT