Published : 09 Jun 2020 07:58 PM
Last Updated : 09 Jun 2020 07:58 PM

'இந்து தமிழ்' இணையச் செய்தி எதிரொலி: கழிப்பிடத்தில் வசித்த மூதாட்டிக்குக் கைகூடிய வீடு

கழிப்பிடமே வசிப்பிடமான கொடுமை; அட்டப்பாடி மூதாட்டியின் கண்ணீர்க் கதை’ என்ற தலைப்பில் கடந்த மே 30-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ இணையத்தில் மூதாட்டி ஒருவர் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். இதன் எதிரொலியாக, மூதாட்டிக்கு வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில், அரசின் இலவச வீடும் வழங்கப்பட இருக்கிறது.

கேரள மாநிலம் அட்டப்பாடி புதூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த திம்மக்கா என்ற 80 வயது மூதாட்டி, பாழடைந்த தனது வீட்டின் கழிப்பறையில் வசித்துவருகிறார். கணவரை இழந்த இவர், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர். இவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை ஒருவர் ஏமாற்றி வாங்கிக்கொண்ட நிலையில், இவரது வீட்டு நிலத்திலும் ஒரு பகுதியையும் சிலர் அபகரித்துக் கொண்டனர்.

இந்த மூதாட்டியின் அவல நிலையை அட்டப்பாடி தேக்குவட்டையைச் சேர்ந்த பாலக்காடு மனித உரிமை கவுன்சில் அமைப்பின் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் நமது கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

இந்தச் செய்தி ’இந்து தமிழ் திசை’ இணையத்தில் வெளியாகிப் பத்து நாட்கள் கடந்த நிலையில், மூதாட்டியின் வேதனை முடிவுக்கு வந்திருக்கிறது. ஆம், பஞ்சாயத்து செலவில் இவரது வசிப்பிடத்திற்குப் பக்கத்திலேயே ஒரு வாடகை வீடு ஏற்பாடு செய்துள்ளார்கள் புதூர் பஞ்சாயத்து அலுவலர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தேக்குவட்டை ராதாகிருஷ்ணன், “ 'இந்து தமிழ் திசை' இணையத்தில் செய்தி வெளியான பின்பு இங்குள்ள மலையாள ஊடகங்களிலும் திம்மக்கா பற்றிய செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து இவரது வசிப்பிடத்தைப் பார்வையிட்ட புதூர் பஞ்சாயத்து அலுவலர்கள், ஒரு வாடகை வீட்டை ஏற்பாடு செய்து தந்துள்ளனர். அதுமட்டுமல்ல, பாலக்காடு எம்.பி., தன் உதவியாளரை அனுப்பி நிலைமையை விசாரித்தார்.

தற்போது, திம்மக்காவுக்கு அரசு வழங்கும் இலவச வீடு ஒன்றை ஏற்பாடு செய்து தருவதாக அவர் அறிவித்திருக்கிறார். இந்தச் செய்தியை வெளியிட்டு திம்மக்காவின் துயர் தீர்த்த ‘இந்து தமிழ் திசை’க்கு நன்றி” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x