Published : 09 Jun 2020 06:43 PM
Last Updated : 09 Jun 2020 06:43 PM
தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த முடிவை மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இதனிடையே தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவிருந்த 9 லட்சத்து 55 ஆயிரத்து 748 மாணவர்களில் 10 ஆயிரத்து 742 பேர் தனித்தேர்வர்கள். இதுதவிர ஏற்கெனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறத் தவறியவர்கள் 23 ஆயிரத்து 581 பேர். இவர்களுக்கும் தேர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளதா என்கிற கேள்வியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிகாரியிடம் கேட்டோம்
சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் தொற்று குறைய வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அடிப்படையாக வைத்து பெற்றோர்களின் கோரிக்கை மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 15 ஜூன் அன்று தொடங்கவிருந்த 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும். ஆகவே இது பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வினை எழுதவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 687 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத்தான் பொருந்தும். தனித்தேர்வர்களும், பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும்.”
இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை அதிகாரி தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்களின் விண்ணப்பம் கடந்த ஜனவரி மாதம் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு மையங்களில் ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுபோக ஏற்கெனவே பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வினை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் 2020 மற்றும் ஜூன் 2020 பருவங்களில் நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதவிருந்த பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஆனால், தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி பெறத் தவறி மீண்டும் தேர்வு எழுதக் காத்திருந்தவர்களுக்கும் தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் தெரிவிக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT