Published : 09 Jun 2020 05:36 PM
Last Updated : 09 Jun 2020 05:36 PM
கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் கரோனா பொதுமுடக்கக் காலத்திலும் தேர்தல் ஜூரம் உச்சத்தில் இருக்கிறது. தொகுதிக்குள் திமுக, அதிமுகவுக்குள் நடக்கும் யுத்தம்தான் இப்போது மாவட்டத்தின் பேசுபொருள்!
கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியை வெல்லும் கட்சிதான் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று அரசியல் கட்சியினர் காலங்காலமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், கடந்த 2016 தேர்தலில் அது பொய்த்துப்போனது. இங்கு திமுகவின் ஆஸ்டின் வெற்றி பெற்றார்; அதிமுக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. எனினும், அரசியல் சென்டிமென்ட் தோற்றதாலேயே அதிமுக தலைமையையே இழந்து பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது என்றும் தொகுதிக்குள் வினோத நம்பிக்கை(!) சிலரிடம் நிலவுகிறது.
இந்தத் தொகுதியில் கடந்த தேர்தலில் தளவாய்சுந்தரம் 5912 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ஆனால், இப்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக 24,638 வாக்குகளைப் பெற்றிருந்தது. இதைக் கணக்குப் போட்டு இந்தத் தொகுதியில் மீண்டும் களமிறங்கக் காய் நகர்த்துகிறார் தளவாய். இவருக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் ஆஸ்டினும் தனது அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.
முன்பு ஆஸ்டினும் அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி, எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமை போட்டியிட வாய்ப்புக் கொடுக்காததால் நாகர்கோவில் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டுத் தோற்றார். அதைத் தொடர்ந்து தேமுதிகவுக்கு சென்றவர், அங்கிருந்து திமுகவுக்குத் தாவினார். கடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஆஸ்டின்.
சொந்தக் கட்சிக்குள் இருந்தபோதே எதிரெதிர்த் துருவங்களாக இருந்த தளவாயும், ஆஸ்டினும் கடந்த தேர்தலில் நேருக்கு நேர் மோதியது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதேநேரம் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் தளவாய்சுந்தரம் டெல்லிப் பிரதிநிதியாகி அரசியலில் தன் இருப்பை உறுதி செய்தார்.
இந்த நிலையில், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட்டனர். கரோனா பொதுமுடக்கத்தின் தொடக்கத்தில் இருந்தே, ஆஸ்டினும் தொகுதியில் சுற்றிவந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். பொதுமுடக்கத்தின் தொடக்கத்தில் சென்னையில் இருந்த தளவாய்சுந்தரம் அங்கிருந்தவாறே தோவாளை, சுவாமித்தோப்பு கிராமங்களில் தனது ஆட்கள் மூலம் நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில் அண்மையில் குமரிக்கு வந்த தளவாய், தானே நேரடியாகக் களத்தில் இறங்கி தினம் ஒரு ஊராட்சி என நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். திமுகவினர் தொடர்ந்து உதவிவந்த நிலையில், அதிமுகவுக்கு இணையாகத் தொகுதிக்குள் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. தொகுதிக்குள் அதிமுகவினர் இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமான அரிசிப் பைகள், மளிகைப் பொருள்களை வழங்கியுள்ளனர்.
ஏற்கெனவே நிவாரணம் வழங்கும் விஷயத்தில் திமுகவுக்குச் சறுக்கல் ஏற்பட்ட நிலையில், தளவாய் சுந்தரத்தின் தலையீட்டால் அரசு விழாக்களில் தான் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டைக் கிளப்பினார் ஆஸ்டின். வீட்டுவசதி வாரியத்தால் புதிதாகக் கட்டப்பட்ட குடிசைமாற்று வாரியத்தின் புதிய வீடு திறப்பு விழாவில் மேடையில் இடம் தராதது தொடங்கி, கரும்பாட்டூர் கிராமத்தில் தனது கோரிக்கையால் அமலுக்கு வந்த சாலைப் பணியைத் தொடங்க விடாமல் தளவாய் சுந்தரம் தடுப்பதாகவும் புகார்ப் பட்டியல் வாசித்தார் ஆஸ்டின். பாய் விரித்து அந்த சாலையிலேயே படுத்துப் போராட்டம், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் என ஆஸ்டின் விதவிதமாக நடத்திய போராட்டங்கள் குமரியின் ஹாட் டாபிக் ஆகின.
இதுகுறித்து தளவாய்சுந்தரம் இந்து தமிழ் இணையத்திடம் கூறுகையில், “கரும்பாட்டூரில் சாலை போடுவது எம்எல்ஏ நிதியில் இல்லை. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எனது கோரிக்கையை ஏற்று ஒதுக்கிய நிதி அது. இப்படி என் கோரிக்கையில் ஊரக வளர்ச்சி முகமை ஒதுக்கும் நிதியையெல்லாம் இவர் திட்டம் போல் நின்று போஸ் கொடுத்துத் தொடங்கி வைப்பது தொடர்ந்து வந்தது. இதைப் பார்த்து தொகுதிக்குள் இருக்கும் எங்கள் கட்சியினரே கொதித்துப் போனார்கள். 14-வது நிதிக்குழு அடிப்படையில் தமிழக அரசு ஒதுக்கும் நிதியை தன் நிதிபோல் அரசியல் செய்தார் ஆஸ்டின். பணியைத் தொடங்க நான் நேரம் கொடுத்தால், நான் சொல்லும் நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே வந்துவிட்டு நான் தாமதமாக்கியதாக புகார் சொல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
கரோனா நிவாரணம் வழங்குவதில் எங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அதை மறைக்கப் போராட்டம் என்னும் பெயரில் அரசியல் ஸ்டண்ட் அடிக்கிறார் ஆஸ்டின். பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் வேலைசெய்ய திமுக கொடுத்த பணத்தில் ஏழைகளுக்கு நலத்திட்டம் வழங்கலாம். அதைவிட்டுவிட்டு இப்படியெல்லாம் அரசியல் நாடகம் போடுவது அபத்தம்” என்றார்.
பாஜக இந்தமுறை தங்கள் கூட்டணியில் இருப்பதால் தன்னால் எளிதில் வெல்லமுடியும் என நினைக்கிறார் தளவாய். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக பின்னுக்குத் தள்ளப்பட்டு காங்கிரஸ் கூடுதல் வாக்குகள் வாங்கியதைச் சுட்டிக்காட்டிச் சிரிக்கிறது திமுக.
தேர்தலைக் குறிவைத்து நடக்கும் இந்த அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் கரும்பாட்டூரில் இன்று காலை குறிப்பிட்ட அந்த சாலைப் பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது. இதில் தளவாய் சுந்தரமும், ஆஸ்டினும் கலந்து கொண்டனர்.
சாலைப் பணிக்காக வந்த ரோட் ரோலரின் மேல் நின்று திமுகவினர் உதயசூரியன் சின்னத்தையும், அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தையும் காட்டி உற்சாகமானார்கள். தொகுதிக்குள் திமுக, அதிமுகவினர் புகைப்படத்துக்காகவேனும் சேர்ந்துவிட்டனர். ஆனால் பாவம் அந்த தனிமனித இடைவெளிதான் காணாமல் போய்விட்டது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT