Published : 09 Jun 2020 05:00 PM
Last Updated : 09 Jun 2020 05:00 PM
கரோனா ஊரடங்கால் சுற்றுலா மையங்கள் அனைத்தும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து சுற்றுலா பயணிகள் இன்றி காணப்பட்டது. இங்குள்ள படகு இல்லம், அருங்காட்சியகம், காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் என சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சுற்றுலாவை நம்பி வருவாய் ஈட்டி வந்த தனியார், மற்றும் அரசு வர்த்தக மையங்கள் அனைத்தும் முடங்கின.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக விவேகானந்தர் பாறை, மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு பயணம் செல்வதற்காக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ.4 கோடியில் தாமிரபரணி என்ற சொகுசு படகு புதிதாக வரவழைக்கப்பட்டு படகு இல்லத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உள்ள 3 படகுகளுடன் இந்தப் படகையும், ஊரடங்கிற்கு பின்னர் அனுமதி கிடைத்ததும் இயக்குவதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்ட நிலையில் முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள், மற்றும் பக்தர்கள் வசதிக்காக படித்துறை அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக மீண்டும் நடந்து வருகிறது. வெறிச்சோடி காணப்பட்ட கன்னியாகுமரியில் 73 நாட்களுக்கு பின்னர் இன்று முக்கடல் சங்கமம், மற்றும் கடற்கரை சாலை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.
பிற மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் குமரி மாவட்டம் வருவோர் கன்னியாகுமரி வந்து கடல் அழகை ரசித்து வருகின்றனர்.
இதனால் இந்த மாத இறுதிக்குள் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. அதே நேரம் படகு சவாரி தொடங்கினால் தான் மீண்டும் கன்னியாகுமரி களைகட்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT