Published : 09 Jun 2020 03:08 PM
Last Updated : 09 Jun 2020 03:08 PM
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் எனப் பலரும் தீவிரமாகக் போராடி வருகின்றனர். இவர்களோடு சேர்ந்து ஊர்க்காவல் படையினரும் கரோனா களத்தில் நிற்கின்றனர். இந்தச் சூழலில் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என ஊர்க்காவல் படையினர் வேண்டுகோள் வைக்கின்றனர்.
இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையத்திடம் பேசிய குமரி மாவட்ட ஊர்க்காவல் படை இளைஞர்கள் சிலர், “காக்கிச் சட்டையின் மீதான காதலால்தான் ஊர்க்காவல் படையில் சேர்ந்திருக்கிறோம். காவல் பணியை வாழ்வின் லட்சியமாகக் கொண்டு அதற்கான பணிக்கு முயற்சி எடுத்துக்கொண்டே ஊர்க்காவல் படையிலும் இருக்கும் இளைஞர்கள் ஏராளம். கரோனா காலமான இப்போது, அனைத்து நாட்களிலும் வேலை இருக்கிறது. ஆனால், சாதாரண காலங்களில் மாதத்தில் 5 நாள்கள் தான் பணி கொடுப்பார்கள். ஒரு டியூட்டிக்கு 560 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு அதிகபட்சமே மாதம் 2,800 ரூபாய்தான் எங்களுக்கு ஊதியமாகக் கிடைக்கும்.
அதேநேரம், எப்போது பணிக்கு அழைப்பார்கள் எனத் தெரியாததால் எங்களுக்கு வேறு வேலைகளுக்கும் செல்லமுடியாது. குறைந்தபட்ச வாழ்வியல் ஓட்டத்துக்கான சம்பளத்தைக்கூட ஊர்க்காவல் படை பணியின் மூலம் சம்பாதிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான ஊதியமே எங்களுக்கு கடந்தவாரம் தான் வந்தது. ஜனவரி, பிப்ரவரி மாதச் சம்பளம் இன்னும் கிடைக்காத நிலையில், மார்ச் 24 முதல் கரோனா டியூட்டிக்கு அழைக்கப்பட்டோம்.
அப்போதிருந்தே மாதத்திற்குக் குறைந்தபட்சம் 16 நாள் டியூட்டி வரை கிடைத்து வந்தது. அதிலும் இப்போது மறு உத்தரவு வரும்வரை தினசரி டியூட்டி பார்க்கச் சொல்லி எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள். உணவுப் படியும் இப்போது தனியாக வழங்கப்பட்டுள்ளது. இப்படி, கரோனா டியூட்டிக்கான சம்பளம் வந்துவிட்ட நிலையில் ஜனவரி, பிப்ரவரி மாத ஊதியம் இன்னும்கூட கைக்குவரவில்லை. இதெல்லாம் குமரி மாவட்டத்தில் இருக்கும் பிரச்சினை. இதேபோல் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வகையான சிக்கல்கள் இருக்கின்றன.
கரோனா ஒழிப்பில் எங்களையும் ஒப்புக்கொடுத்து முன்வரிசையில் நிற்கிறோம். ரேஷன் கடைகள், மீன், காய்கனிச் சந்தைகள், வங்கிகள் ஆகிய இடங்களில் தனிமனித இடைவெளியை உறுதி செய்யயும் பணியில் நாங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறோம். எங்களின் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல்தான் கரோனா பொதுமுடக்கத்தின் முதல் நாளில் இருந்து களத்தில் இருக்கிறோம்.
எங்களின் அன்றாட குடும்பச் செலவுகளைச் சமாளிக்க ஏதுவாக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் வகையிலாவது ஏற்பாடு செய்யவேண்டும். இந்த நெருக்கடியான காலத்தில் எங்களின் சேவையைக் கருத்தில் கொண்டு அரசு இதை உடனடியாகச் செய்துகொடுக்க முன்வரவேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT