Published : 09 Jun 2020 11:39 AM
Last Updated : 09 Jun 2020 11:39 AM

ஓசூர் நகரப் பேருந்துகளில் நிரம்பி வழியும் பயணிகள் கூட்டம்: தனிமனித இடைவெளி இன்றி கரோனா பரவும் அபாயம்

ஓசூர் - தேன்கனிக்கோட்டை வழித்தடத்தில் மத்திகிரி அருகே சமூக இடைவெளியின்றி நிரம்பி வழியும் பயணிகளின் கூட்டம் | படம்- ஜோதி ரவிசுகுமார்.

ஓசூர்

ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளியின்றி 100 சதவீத அளவுக்கும் மேலாக பயணிகள் ஏற்றப்படுகின்றனர். இதனால் கரோனா தொற்று பரவும் அபாய நிலை உள்ளதால் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அரசுப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. பின்பு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த 1-ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அறிவிப்பு காரணமாக ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 சதவீத அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்றும் அதில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 60 சதவீதப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆரம்பத்தில் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பாகலூர், தளி, அஞ்செட்டி, சூளகிரி உள்ளிட்ட நகர மற்றும் கிராமப் பகுதிகளுக்கு 60 சதவீதப் பயணிகளுடன் 50 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த அரசுப் பேருந்துகளில் ஆரம்பத்தில் ஒரு சில நாட்களில் மட்டும் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. அதன் பிறகு இப்பகுதியில் இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளியின்றி 100 சதவீதத்துக்கும் மேலாக பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். குறிப்பாக ஓசூர் - தேன்கனிக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் அளவுக்கு அதிகமாகப் பயணிகள் ஏற்றப்படுகின்றனர். இதனால் அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாமல் பயணிகள் ஒருவரை ஒருவர் உரசியபடி பயணிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பயணிகளிடையே கரோனா தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளதாகப் பயணிகள் கூறுகின்றனர். ஆகவே ஓசூர் பகுதியில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் நலனை முன்னிட்டு அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x