Published : 08 Jun 2020 09:11 PM
Last Updated : 08 Jun 2020 09:11 PM
சென்னையில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக படுக்கை வசதிகளை மேம்படுத்தும் விதமாக 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்கும் முடிவை தமிழக சுகாதாரத்துறை எடுத்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. தமிழக அளவில் சென்னையின் கரோனா தொற்று 75 சதவீதத்துக்கு மேல் உள்ளது.
சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்றுஎண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் கரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஆனாலும், சென்னையில் அதிகரித்துவரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக படுக்கை வசதிகளை அதிகரிக்கவும், கரோனா தொற்றுள்ளவர்களைத் தனிமைப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையின் கலை அறிவியல் கல்லூரிகளைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். சென்னையில் கரோனா சிகிச்சைக்காக 70 தனியார் மருத்துவமனைகளை கூடுதல் படுக்கை வசதிக்காகப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதில் 30 தனியார் மருத்துவமனைகளை முதற்கட்டமாகப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசுடன் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT