Published : 08 Jun 2020 04:13 PM
Last Updated : 08 Jun 2020 04:13 PM
பிஹாரில் பணியின்போது கொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த கிராமத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு வீரவிளையைச் சேர்ந்தவர் பங்கிராஜ். இவரது மகன் மணிகண்டன்(30). 2014-ம் ஆண்டு ராணுவத்தில் பணியில் சேர்ந்த மணிகண்டன் பிஹார் மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த மார்ச் 7ம் தேதி நாக்கா சோதனை சாவடியில் வாகனங்களை சோதனை செய்தபோது மாடு கடத்தும் கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டனர். கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார்.
ராணுவ வீரர் மணிகண்டனின் உடல் விமானம் மூலம் திருவனந்தபரம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த கிராமமான வீரவிளைக்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது ராணுவ வீரர்கள் இரு சக்கர வாகனத்தில் அணிவகுத்து வந்தனர். மணிகண்டனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டிருந்தது.
ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் மலர் வளையும் வைத்து மணிகண்டனின் உடலுக்கு மரியாதை செய்தார். குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜவான்ஸ் அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ராணுவ வீரர்கள் அணிவகுத்து அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க மணிகண்டனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் மணிகண்டன் மரணத்தால் அவரது கிராமமான வீரவிளை, மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களிடையே சோகம் நிலவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT