Published : 08 Jun 2020 04:13 PM
Last Updated : 08 Jun 2020 04:13 PM
கரோனாவும் அது கொண்டுவந்த பொதுமுடக்கமும் இளைஞர்களுக்குத் தற்சார்பு வாழ்வியலின் அர்த்தத்தையும் புரிய வைத்துள்ளது. அந்த வகையில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவப் பிரதிநிதி இளைஞர் ஒருவர் கரோனாவால் விவசாயி அவதாரம் எடுத்திருக்கிறார்.
குமரி மாவட்டம், பூதப்பாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுசிவம் (31). மருந்து விற்பனைப் பிரதிநிதியான இவரும், இவரது சகோதரரும் சேர்ந்து தரிசாகக் கிடந்த தங்கள் நிலத்தைக் கரோனா காலத்தில் வேளாண் பூமியாக மாற்றியிருக்கிறார்கள். அவர்களே அதில் கீரை வகைகள், வாழை, காய்கனிகள் என நடவு செய்து பராமரிப்பதோடு விவசாயப் பயன்பாட்டுக்காக இவர்களே சேர்ந்து கிணறும் வெட்டியிருக்கிறார்கள்.
இதுகுறித்து வேலுசிவம் 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் கூறுகையில், “பொதுமுடக்கத்தின் தொடக்கத்தில் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளை மருத்துவர்கள் சந்திப்பதை நிறுத்தியிருந்தார்கள். இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு விடுமுறை கொடுத்துவிட்டன. மிக அவசியமான மருந்துகளை மட்டுமே தடையின்றி விநியோகம் செய்து வந்தோம்.
என்னோட அப்பா மணி சுவாமிகள் அர்ச்சகராக இருக்காங்க. என்னோட தம்பி முத்து பி.ஏ., படிச்சுட்டு இருக்கான். அப்பாவுக்கு சர்க்கரை வியாதி உண்டு. அதனால சின்னச் சின்ன உடற்பயிற்சி வேணும்ன்னு எங்க வீட்டுக்குப் பின்னாடி இருந்த இடத்தில் வீட்டுத் தேவைக்கு காய்கனிகள் போட்டு எடுப்பாங்க. அதுபோக நிறைய இடம் சும்மா இருந்துச்சு. கூடவே, தண்ணீரும் தூரத்தில் இருந்து எடுத்துட்டு வர்ற மாதிரி இருந்துச்சு. இந்த லாக்டவுண் எங்களுக்கு சுயசார்பு வாழ்க்கையோட அர்த்ததை சொல்லிக் கொடுத்துருந்துச்சு. கூடவே என்ன வேலை பார்த்தாலும், நம் வாழ்வாதாரத்துக்கு எந்தச் சூழலிலும் கைகொடுக்கும் விவசாயத்தையும் செய்யணும்னு புரிய வைச்சுது.
நானும் என்னோட தம்பியுமா சேர்ந்து நாங்களே லாக்டவுனில் கிணறு வெட்டுனோம். இது செழிப்பான நாஞ்சில்நாட்டுப் பகுதி என்பதால் 12 அடியிலேயே தண்ணீர் வந்துருச்சு. அதைப் பார்த்த உற்சாகத்திலேயே வீட்டுத் தேவைக்காக அப்பா செய்த விவசாயத்தை, வணிக ரீதியாகச் செய்யலாம்னு முடிவெடுத்தோம்.
இப்போ 100 ஏத்தன் ரக வாழைகளும், 15 செவ்வாழையும் போட்டுருக்கோம். 3 மாசம் ஆச்சு. இப்போ தள தளன்னு வளர்ந்து நிக்குது. கூடவே வெண்டை, கத்திரிக்காய்ன்னு இடை இடையே செடிகளும் நட்டு, மகசூல் எடுத்துட்டு இருக்கோம். இதுபோக, பக்கத்திலேயே நண்பனோட பத்து சென்ட் இடம் காலியாக இருந்துச்சு. அதை விவசாயத் தேவைக்காகக் கேட்டு வாங்கி அதில் அரைக்கீரை, தண்டங்கீரை, முருங்கைக் கீரைகள் சாகுபடி செய்யுறோம். இதை எங்ககிட்ட இருந்து ஒரு கட்டு 5 ரூபாய் மேனிக்கு உள்ளூர் வியாபாரிகளே நேரடியாக வந்து வாங்கிட்டு போறாங்க. தோட்டத்தில் முழுக்க இயற்கை வழியில்தான் சாகுபடி செய்யறோம்.
கரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகள் வந்தபின் இப்போது எங்கள் மருந்து விற்பனைப் பிரதிநிதி தொழில் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது. ஆனாலும் ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் வீட்டுத் தேவைக்கும், வருமானத்துக்கும் பெரிதும் கைகொடுத்த விவசாயத்தையும் நாங்கள் கைவிடுவதாக இல்லை.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT