Published : 08 Jun 2020 03:24 PM
Last Updated : 08 Jun 2020 03:24 PM
கரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளது கண்டனத்திற்கு உரியது என்றும், இலவசமாகவே அரசு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருநாவுக்கரசர் எம்.பி. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நிவாரணப் பொருள்களை வழங்கினார். அப்போது, நிகழ்ச்சியில் பலர் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் பங்கேற்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து திருநாவுக்கரசர் எம்.பி. அளித்த பேட்டியில், "மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் பாதுகாக்கத் தவறிவிட்டன. மக்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் பண உதவிகளை வழங்கினால் மொத்தத்தில் ரூ.15,000 கோடி தான் செலவாகும்.
அதை வழங்காமல் வங்கி மூலம் லோன் என மக்களை ஏமாற்றும் செயலில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுகின்றன.
கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இச்சூழ்நிலையில் அரசு மருத்துவமனைகளில் வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க இடமில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனைகளை பயன்படுத்த அதற்கு தற்போது ரூ.15 ஆயிரம் என கட்டணம் நிர்ணயம் செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு அரசு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை.
பத்தாம் வகுப்பு பொதுதேர்வை தள்ளி வைக்க வேண்டும், அல்லது அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும். இந்த நேரத்தில் தேர்வு நடத்துவதால் பள்ளி மாணவ, மாணவிகள் தனியாக செல்வதற்கு தயங்குவதால் பெற்றோரும் உடன் செல்வார்கள்.
ஆகையால் பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைத்துவிட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT