Published : 08 Jun 2020 01:39 PM
Last Updated : 08 Jun 2020 01:39 PM
மணக்குள விநாயகர் கோயில் திறக்கப்பட்ட நிலையில் அங்கு கோயில் யானை லட்சுமி அழைத்து வரப்படாமல் கேவிகே பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் லட்சுமி என்ற பெண் யானை உள்ளது. புதுச்சேரிக்கு வரும் பலருக்கும் யானை லட்சுமி நன்கு பரிச்சயம். யானை லட்சுமி வேதபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் நிற்க வைக்கப்படும். அங்கு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு யானை ஆசி வழங்கும். ஊரடங்கால் யானை லட்சுமி கொட்டகையிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தது.
நீண்டகாலமாக ஒரே இடத்தில் யானை இருந்ததால் மாற்று இடமாக வனம் போன்ற பகுதியில் வைத்துப் பராமரிக்க வனத்துறை உத்தரவிட்டது. இதனையடுத்து யானை லட்சுமியை குருமாம்பேட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்திற்கு (கேவிகே பண்ணை) கொண்டு செல்ல முடிவெடுத்தனர். இதற்கு இந்து முன்னணியினர், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 8) யானை லட்சுமி வேதபுரீஸ்வரர் கோயில் வளாகத்திலிருந்து குருமாம்பேட்டுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, பாஜகவினர், இந்து முன்னணியினர் இதனைத் தடுக்க முயன்றனர். போலீஸார் தலையிட்டு அவர்களை அப்புறப்படுத்தினர்.
யானை லட்சுமியை நடத்தியே குருமாம்பேட்டுக்கு அழைத்துச்சென்றனர். பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் மையம் மரங்கள் நிறைந்து வனம்போல இயற்கை சூழலுடன் காணப்படும். வேளாண் வளாகத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகம் உள்ளது. சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாக யானை லட்சுமிக்கு சிகிச்சை தரலாம். எனவே 15 நாட்கள் அங்கு யானை லட்சுமியைத் தங்கவைத்து புத்துணர்வு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் மணக்குள விநாயகர் கோயில் திறக்கப்பட்ட நிலையில் யானை லட்சுமி இல்லாதது பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வனத்துறை தரப்பில் விசாரித்தபோது, "மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமிக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி கடந்த 2.2.2011 இல் சான்று தரப்பட்டுள்ளது. யானை லட்சுமிக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு எண்ணும் தரப்பட்டுள்ளது.
யானை லட்சுமியை சரியாகப் பராமரிப்பதில்லை என்று புகார்கள் வந்தன. இப்புகார் கடிதம் வந்தவுடன் வாய்ப்பும் தரப்பட்டது. இது கடந்த மார்ச் மாதத்தில் நிகழ்ந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த மே 18-ல் அடுத்தகட்ட கலந்தாய்வு நடைபெற்றது. யானை லட்சுமியின் நலவாழ்வு பற்றி ஆலோசிக்கப்பட்டது. யானை லட்சுமியின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. குறிப்பாக, யானை லட்சுமி நோய், அதற்கான சிகிச்சை தொடர்பாக ஆவணங்கள், தரப்படும் உணவு விவரங்கள் தொடர்பான ஆவணங்கள், யானை செல்லும் இடம் தொடர்பான விவர ஆவணம் மற்றும் தரப்படும் மருந்து ஆவணங்கள் சரிபார்க்கப்ட்டன.
அத்துடன் யானை லட்சுமிக்கு ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை எடுத்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தாக்கல் செய்ததில் சிறுநீர் மற்றும் இதர பரிசோதனை அடிப்படையில் உடல் நிலை சரியாக இருந்தது. ரத்தப் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கிறோம்.
மற்றொரு கடிதமொன்று லோக்சபா எம்.பி. மேனகா காந்திக்கு கடந்த ஜூன் 1-ல் சென்றது. அதில் யானை லட்சுமி தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாகவும், வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் மீறப்படுவதாகவும் இருந்தது. கோயில் நிர்வாகமும் இதில் தோல்வி அடைந்துள்ளது என்றும் புகார்கள் வந்தன. இதையடுத்து காட்டுக்கு யானை லட்சுமி அனுப்பப்படுவதாக தகவல் பரவியது. பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதனால் இரு வாரங்களுக்கு கேவிகே பண்ணைக்கு அழைத்துச் சென்று உடல் நிலையைச் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக கோயில் தரப்பில் கேட்டதற்கு, "யானையை நல்ல முறையில் பராமரித்து வந்தோம். உடல் நலப் பிரச்சினை தொடர்பாக புகார்கள் வந்தன. சிகிச்சை தர இரண்டு வாரத்துக்கு கேவிகே பண்ணைக்கு அனுப்பியுள்ளோம். அதையடுத்து அனைத்து விவர அறிக்கையும் சமர்ப்பிப்போம். மீண்டும் விரைவில் கோயிலுக்கு யானை லட்சுமி திரும்பும்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT