Published : 08 Jun 2020 12:46 PM
Last Updated : 08 Jun 2020 12:46 PM
பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைப்பதை விட ரத்து செய்யவும், அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவக் கல்லூரியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அளிக்காத மத்திய அரசை கண்டித்தும், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் கட்சி அலுவலகம் முன்பு இன்று (ஜூன் 8) நடைபெற்றது.
அதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சித்தலைவருமான திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:.
"மருத்துவக்கல்லூரியில் இட ஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்ற தமிழகம், புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். #VCKforOBCquota என்ற ஹாஷ்டேக் மூலம் நாடு முழுவதும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்,
மத்திய அரசு கரோனா வைரஸை குறைக்க வழியை காணாமல் அதிகப்படுத்த வழிவகை செய்து வருகின்றது. கரோனா பரிசோதனை எண்ணிக்கை மிகச்சொற்பமாக உள்ளது. தமிழகத்திலும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
மத்திய, மாநில அரசுகளின் கரோனா தடுப்பு பணிகளில் மன நிறைவு இல்லை..வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. கரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை குறைத்துக்காண்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஆபத்தானது. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு இப்போது பாதிப்பு அதிக அளவில் உள்ளது என்ற குற்றச்சாட்டை ராகுல் காந்தி தெரிவித்தார். இக்குற்றச்சாட்டுக்கு மத்திய அரசிடமிருந்தும், பிரதமர் மோடியிடமிருந்தும் மறுப்பு இல்லை.
10-ம் வகுப்பு தேர்வினை தள்ளிப்போடுவதைவிட ரத்து செய்ய வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடாகும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.
சென்னையை 100% கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட வேண்டும். வீடு வீடாக மக்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தி அனைவராலும் சிகிச்சை பெற முடியாது. அதனால் தனியார் மருத்துவமனைகளை ஆறு மாதங்களுக்கு அரசு தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். தமிழகம், புதுச்சேரியில் 3 மாதத்திற்கு மின் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது. சிறு, குறு நிறுவனங்களிடமும் மின் கட்டணம் வசூலிக்கக் கூடாது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT