Published : 08 Jun 2020 12:05 PM
Last Updated : 08 Jun 2020 12:05 PM
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 8) வெளியிட்ட அறிக்கை:
"உலகத்தையே அச்சுறுத்திய கரோனா பெருந்தொற்று காரணமாக பொதுத் தேர்வு தள்ளிப் போனதால், மாணவச் செல்வங்கள் துவண்டு இருந்த நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தக்கூடாது என ஏப்ரல் 7 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.
அன்று இருந்ததைவிட, இன்று தமிழகத்தில் கரோனா தொற்று பல நூறு மடங்கு உயர்ந்து இருக்கின்றது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலைமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
மூன்று மாதங்கள் இடைவெளி ஏற்பட்டு விட்ட நிலையில், மீண்டும் முறையான பயிற்சிகள் அளிக்காமல், ஆயத்தப்படுத்தாமல், மாணவச் செல்வங்களைத் தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. அது அவர்களின் மனநிலையைக் கடுமையாகப் பாதிக்கும். தங்கள் பிள்ளைகளின் உயிரோடு விளையாட பெற்றோர்களும் விரும்பவில்லை.
11 ஆம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது.
எனவே, தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்"
இவ்வாறு வைகோ தெரிவித்துள்லார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT