Published : 04 Sep 2015 06:43 PM
Last Updated : 04 Sep 2015 06:43 PM
பாமக ஆட்சிக்கு வந்தால் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம்; விவசாயம், தொழில் வளர்ச்சி, அடிப்படைக் கட்டமைப்பு ஆகியவை நிறைவேற்றப்படும்; காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு ஆகிய இடங்களில் தமிழ்நாட்டின் உரிமை மீட்கப்படும்.
"மாற்றத்துக்காக- அன்புமணி" (Anbumani- for change) என்ற கைபேசி செயலி சேவை செப்டம்பர் 2-ம் தேதி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் சமூக ஊடகங்களைக் கொண்டே வியத்தகு வெற்றியை பெற்றனர். சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட திமுகவின் இணையதளம், தேமுதிகவின் கேப்டன் செயலி ஆகியவற்றைத் தொடர்ந்து, இப்போது பாமக கட்சியின் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வரும் வகையிலேயே கைபேசி செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பாமக தெரிவித்துள்ளது. வருங்கால முதல்வர் என்று பாமக கட்சி அறிவித்த, அன்புமணி ராமதாஸை முதன்மையாகக் கொண்டே இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
'படித்தவர்களே அரசியலுக்கு வரவேண்டும்' என்பதை முன்னிலைப்படுத்தும் பாமக, செயலியில் அன்புமணியின் சுயவிவரப் பக்கத்தில் அவரின் மருத்துவக் கல்வித்தகுதியை இணைத்திருக்கிறது. அவர் மருத்துவம் படித்ததையும், பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதையும் குறிப்பிட்டிருக்கிறது.
அட்டவணை என்னும் ஐகானில் கட்சியின் மாநாடுகள், நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றின் இடம், தேதி மற்றும் நேரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்சி விவரங்கள் என்னும் ஐகானில், பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு, கட்சியின் தலைவர்கள் விவரம், ராமதாஸ் கடந்து வந்த அரசியல் பாதை, சட்டமன்ற, மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களில் வெற்றி பெற்ற, பாமக உறுப்பினர்களின் விவரங்கள் உள்ளிட்டவைகளின் தொகுப்புகளும் உள்ளன. 'பாமக குறிப்பிட்ட இன மக்களின் நலனுக்காகவே இயங்கும் ஜாதிக்கட்சி' என்னும் பெயரை உடைக்கும் விதமாக, கட்சியின் முக்கியப் பொறுப்புகளான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரின் இனங்களையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.
வழக்கம்போலவே, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் இணைப்புகளும் தரப்பட்டிருக்கிறது.
புகைப்படங்கள், காணொளிகளைக் காணும் வகையில் தனித்தனியே ஐகான்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அன்புமணி நேரலைகளில் பங்கு கொள்ளும் நேரங்களில், அதைக் காணும் வகையில், நேரடி ஒளிப்பரப்புக்கு எனத் தனியாகவே ஓர் ஐகான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயலியைப் பயன்படுத்துபவர்கள், தங்களின் எண்ணங்களையும், யோசனைகளையும் புகைப்படமாகவோ, ஒலி, ஒளி வடிவிலோ தெரிவிக்கலாம். இதற்கெனத் தனியாக ஐகான் உள்ளது.
கட்சியில் சேர விரும்பும் நபர்கள், உறுப்பினர்கள் படிவத்தைப் பூர்த்தி செய்து, ஆன்லைனிலேயே சமர்ப்பித்து பாமக உறுப்பினராகும் வசதியும் இதில் இருக்கிறது.
மது ஒழிப்புப் போராட்டத்தையே தன் முதன்மைப் பிரச்சாரமாக மேற்கொண்டு வரும் பாமக, தன் செயல்திட்டத்திலும் அதையே கூறியிருக்கிறது. அத்தோடு ஊழல் ஒழிப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.
பாமக ஆட்சிக்கு வந்தால் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம்; விவசாயம், தொழில் வளர்ச்சி, அடிப்படைக் கட்டமைப்பு ஆகியவை நிறைவேற்றப்படும்; காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு ஆகிய இடங்களில் தமிழ்நாட்டின் உரிமை மீட்கப்படும் என்ற வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT