Published : 23 Sep 2015 10:37 AM
Last Updated : 23 Sep 2015 10:37 AM
மனித வரலாற்றின் பாரம்பரியத்தை இன்றைக்கும் பிரதிபலிப்பது பழமையான கட்டிடக்கலையே ஆகும். உதாரணமாக அஜந்தா, எல்லோரா, மாமல்லபுரம், கோனார்க் போன்றவை நமது பழமையான சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றைக்கும் திகழ்கிறது. செங்கோட்டை, தாஜ்மகால், ஆஜ்மீர், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா போன்ற இடங்கள் நம்மை அந்த காலத்தின் நினைவுகளுக்கே கொண்டு செல்கின்றன.
கடந்த 1989-ம் ஆண்டு இந்திய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை, நம் நாட்டில் 1939-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பிரசித்திபெற்ற கட்டிடங்களின் தன்மை, புனிதத்தன்மையை கருத்தில் கொண்டு, ஒரு பட்டியலை தயார் செய்ய வேண்டும் என்றும், அப்பட்டியலில் உள்ள கட்டிடங்களின் பழமை, தொன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்தது.
34 பாரம்பரிய அஞ்சலகங்கள்
அந்த ஆலோசனைப்படி இந் திய அஞ்சல்துறை, 1939-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட 34 அஞ்சல் நிலையக் கட்டிடங்களை பாரம்பரியமிக்கதாக தேர்வு செய்தது. இக்கட்டிடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள சிமென்ட், மற்றும் கலவைப் பொருட்கள், கட்டிடத் தூண்கள், அதன் வெளி மற்றும் உட்புற அமைப்புகளை பழமை மாறாமல் பாதுகாக்க ஓய்வுபெற்ற மூத்த அஞ்சல் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவையைச் சேர்ந்த தேசிய விருதுபெற்ற ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் ஹரிஹரன் என்பவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னை, நாகப்பட்டினம், ஊட்டி, ஆக்ரா, பெங்களூரு, டார்ஜிலிங், புதுடெல்லி, லக்னோ, நாக்பூர், பாட்னா, புனே, வாரணாசி, மும்பை மற்றும் கொல்கத்தா உட்பட 34 அஞ்சல் அலுவலக கட்டிடங்களை பாரம்பரிய கட்டிடங்களாக அஞ்சல்துறை தேர்வு செய்தது. இவற்றில் கொல்கத்தா, மும்பை பொது அஞ்சல் அலுவலகங்கள், தமிழகத்தில் சென்னை பொது அஞ்சல் அலுவலகம், நாகப்பட்டினம் மற்றும் ஊட்டி தலைமை அஞ்சல் நிலையங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு தகவல் தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களாகக் கருதப்படுகின் றன.
இந்தியாவின் முதல் அஞ்சல் நிலையமான கொல்கத்தா ஜி.பி.ஓ அலுவலகத்துக்கான சொந்தக் கட்டிடம், டல்லஸ்ஹவுஸ் சதுக்கத்தில் 1864-1868-ல் இந்திய அரசின் கட்டிட பொறியாளரும், கிழக்கு வங்காள ரயில்வே கம்பெனியின் நிர்வாகியுமான வால்டர் பி. கிரான் வில்லி என்பவரால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இதற்காக அப்போது ரூ.6.50 லட்சம் செலவானது. கிரீஸ், ரோமன் பாணியில் மிகவும் நேர்த்தியாக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
தற்போதுள்ள மும்பை ஜி.பி.ஓ. அஞ்சல் நிலைய அலுவலகத்தினை கட்டும் பணி ஜான்பெக் என்ற பிரபல பிரிட்டிஷ் நிபுணரால் 1904-ம் ஆண்டு செப்.1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த பணி 1913 மார்ச் 31-ம் தேதி நிறைவு பெற்றது. இந்த அலுவலகத்தை கட்ட அப்போது ரூ.18 லட்சம் செலவாகியுள்ளது. இந்த அலுவலகம் உலகளவில் மிகப்பெரிய அஞ்சல் நிலையம் என்ற பெருமையைக் கொண்டது.
சென்னை ஜிபிஓ அலுவலகம், ஆரம்பத்தில் புனித ஜார்ஜ் சதுக் கத்தில் செயல்பட்டது. அதன்பின், இந்த அஞ்சல் நிலையம் தற்பொழுதுள்ள சிவப்பு செங்கல் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 1874-ல் இக்கட்டிடத்தை கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இந்த அஞ்சல் நிலையம் கட்ட அப்போதைய செலவு ரூ.6,80,850 ஆகும். இந்த அலுவலகம், தமிழ் நாட்டிலேயே அதிகமான அஞ்சல் ஊழியர்களை கொண்டது. 2000-ம் ஆண்டு அக்.28-ம் தேதி, இந்த அலுவலகத்தின் ஒரு பகுதி தீ விபத்தால் பாதிக்கப்பட்டது. ஆயினும், இக்கட்டிடத்தின் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதை சீரமைத்தது.
நாகப்பட்டினம் அஞ்சல் அலுவலகம், சுண்ணாம்பு, பிளாஸ்டர் மற்றும் பெயின்ட் அடிக்கப் பெற்று, ஜன்னல்கள் வட்ட வடிவில் அமைக்கப் பெற்றுள்ளது. ஊட்டி அஞ்சல் அலுவலகம் 1826-ல் கட்டப்பட்டது.
இந்த 34 தொன்மையான அஞ்சல் நிலையங்களையும், அதன் பழமை மாறாமல் புராதனச் சின்னங்களாக இந்திய அஞ்சல்துறை பராமரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT