Last Updated : 07 Jun, 2020 11:56 AM

 

Published : 07 Jun 2020 11:56 AM
Last Updated : 07 Jun 2020 11:56 AM

கரோனா பாதிக்கப்பட்டு இறந்த சென்னைக்காரர் சடலம் சவக்குழியில் தள்ளப்பட்ட விவகாரம்- விளக்கம் கேட்டு  கலெக்டர் நோட்டீஸ்

பிரதிநிதித்துவ நோக்கத்துக்கான படம்.

புதுச்சேரி

கரோனா பாதிக்கப்பட்டு இறந்த சென்னைக்காகரர் சடலம் சவக்குழியில் தள்ளப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கரோனாவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை அணிந்த பணியாளர்கள் நால்வர், ஆம்புலன்ஸில் இருந்து உடலை தூக்கி வந்தனர். அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த குழி அருகே வந்தனர். அப்போது குழிக்குள் சடலத்தை கயிறு கட்டி இறக்காமல் தள்ளி விட்டது போல் திரும்பினர்.

கரோனா தொற்று பாதித்தவரின் உடலை அலட்சியமாக சவக்குழியில் வீசி செல்வதாக விடியோக்கள் இணையத்தில் பரவின.
தொடர்ந்து இவ்விவகாரம் சர்ச்சை ஏற்படுத்திய சூழலில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "உடலை முழுவதும் புதைப்பதற்கு ஏற்ற வகையில் முன்னேற்பாடு செய்து அடுத்த துறையான உள்ளாட்சித்துறையிடம் தந்தோம். சுகாதாரத்துறையினர் அடக்கம் செய்யவில்லை. நாங்கள் விசாரித்த வகையில், தூக்கி சென்ற ஊழியர் ஒருவரின் கை நழுவியதால் உடல் குழியில் விழுந்து விட்டதாகதான் அறிந்தோம். இதுதொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் இச்சம்பவம் நடந்த வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் விளக்கம் கோரியுள்ளார்" என்று குறிப்பிட்டனர்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்:

மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலர் சுகுமாரன் கூறுகையில், "கரோனாவால் இறந்தோரின் உடல்களை கையாள்வது தொடர்பாக மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்மதிப்பு சம்பவத்தில் தொடர்புடையோர் மீது உரிய நடவடிக்கை தேவை. இதுபற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x