Published : 07 Jun 2020 07:18 AM
Last Updated : 07 Jun 2020 07:18 AM

துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்கல்

சேலம்

இந்தியா- பாகிஸ்தான் எல்லை யில் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்ய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெத்தலைக்காரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (40). இவர் கடந்த 1999-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து அவில்தாராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீரில் உள்ள சுந்தரபாணி பகுதியில் இரு நாட்டு ராணுவத் தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது, உடலில் குண்டு பாய்ந்து மதியழகன் வீரமரணம் அடைந்தார்.

இதையடுத்து, அவரது உடல் நேற்று மாலை விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து மதியழகன் உடலை ராணுவ வீரர்கள் அவரது சொந்த ஊரான வெத்தலைக்காரன் காட்டுக்கு கொண்டு வந்தனர். அவரது உடலைப்பார்த்து அவரது மனைவி தமிழரசி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் மதியழகன் உடலுக்கு தேசியக் கொடியை போர்த்தி ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மதியழகன் உடலுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்த நிவாரண நிதி ரூ.20 லட்சத்துக்கான காசோலையை மதியழகனின் குடும்பத்தினரிடம் ஆட்சியர் வழங்கி ஆறுதல் கூறினார். இரவு மதியழகன் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x