Published : 06 Jun 2020 07:18 PM
Last Updated : 06 Jun 2020 07:18 PM
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் வாங்கச் செல்வதைத் தவிர்த்து சில்லறை விற்பனைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மீன் வாங்க வேண்டும் என, பொதுமக்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜூன் 6) வெளியிட்ட அறிக்கை:
"மீன்பிடித் தடைக்காலம் முடிவு பெற்றதைத் தொடர்ந்து சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள் ஜூன் 15-ம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவிருக்கின்றன. இதனால் மீன்பிடித் துறைமுகத்தில் அதிக அளவிலான மீன் வரத்து இருக்கும்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மீன்பிடித் துறைமுகத்தில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி மீன் ஏலம் விடுதல், மீன்களைக் கொண்டு செல்லுதல் மற்றும் சில்லறை விற்பனை செய்தல் போன்றவற்றுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எனது தலைமையில், தலைமைச் செயலகத்தில் கடந்த மே 29 அன்று கூட்டம் நடத்தி விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளரும், காவல் துறைத் தலைவரும் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று (ஜூன் 5) பிற்பகல் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, சென்னை மாநகர காவல் துறை ஆணையர், காவல் துறை இணை ஆணையர், வடசென்னை, மீன்துறை இயக்குநர் மற்றும் சென்னை துறைமுக பொறுப்பு கழக அலுவலர்கள் உடனிருந்தனர்.
தலைமைச் செயலாளரால் மீன் இறங்கு தளம், ஏலம் விடும் இடம், சில்லறை விற்பனைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட காலியிடம், வாகனங்களை நிறுத்துமிடம் மற்றும் கட்டுமானப் பணியிலுள்ள சில்லறை மீன் விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில், கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் இறங்கு தளப் பகுதிகளில் பொதுமக்களுக்கு மீன் சில்லறை விற்பனை செய்வது நாளை (ஜூன் 7) முதல் தடை செய்யப்படுகிறது. எனினும், சில்லறை வியாபாரிகள் துறைமுகப் பகுதியிலிருந்து மீன்களை வாங்கி சில்லறை விற்பனைக்கென மீன்பிடித் துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 200 கடைகளில் மீன்களை விற்பனை செய்யலாம்.
தற்போது மீன்பிடி துறைமுகப் பகுதியில், சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மட்டும் இந்தப் புதிய இடத்தில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், பொதுமக்கள் இந்த சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே மீன் வாங்க அனுமதிக்கப்படுவார்கள். சில்லறை விற்பனை காலை 5 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே நடைபெறும். எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் மீன் ஏலம் விடும் இடத்திலோ, இறங்கு தளத்திலோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதுதவிர, படிப்படியாக சில்லறை விற்பனையைப் பரவலாக்க என்.டி.ஓ. குப்பம் அருகில் சில்லறை விற்பனைக்கென சுமார் 50 கடைகளுடன் கூடிய தற்காலிக வசதிகள் அமைக்கப்படும். மேலும், இம்மாத இறுதியில் மீன்பிடித் துறைமுகத்தின் தெற்குப் பகுதியிலுள்ள 145 கடைகள் அடங்கிய சில்லறை மீன் விற்பனை நிலையக் கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்ற பின்பு அங்கும் தற்காலிக சில்லறை விற்பனை நிலையத்திலுள்ள வியாபாரிகள் மேற்படி விற்பனை நிலையத்திலும் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பொதுமக்கள் மீன்பிடித் துறைமுகத்திற்கு மீன் வாங்கச் செல்வதைத் தவிர்த்து சில்லறை விற்பனைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மீன் வாங்கவும், கூட்டம் கூடாமல் தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்கவும், தவறாமல் முகக்கவசம் அணிந்து கரோனா தொற்று பரவாமல் தங்களைத் தற்காத்துக் கொள்வதுடன், மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படாமல் தடுக்க ஒத்துழைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment