Published : 06 Jun 2020 07:06 PM
Last Updated : 06 Jun 2020 07:06 PM

சோழர் காலக் கோயிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கு: இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஶ்ரீதரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள அருள்மிகு நான்மடிகை பெருமாள் கோயில், சோழ மன்னர்களான கேசரி வர்மா, ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்கியது.

108 விஷ்ணு திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை தற்போது பராமரித்து வருகிறது.

சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் கோசாலாவிற்கு மாடுகள் தானமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், எவரும் தானம் செய்ய முன்வருவதில்லை. பல்வேறு சமயங்களில் சிலைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் ஆலயம் உரிய பாதுகாப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சுமார் 4,000 ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்களை பணியில் ஈடுபடுத்தியிருப்பதாக கடந்த 2009-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆலயத்திற்கு உரிய காவலர்கள் நியமிக்கப்படாததால் சிலைகள் திருப்படவும் வாய்ப்பு உள்ளது.

அதனால் சிதிலமடைந்த கதவுகளை மாற்றி மராமத்துப் பணிகள் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும், ஆலயத்தின் பாதுகாப்பிற்கு ஓய்வுபெற்ற காவல்துறையைச் சேர்ந்த நபர் அல்லது ராணுவத்தைச் சேர்ந்த நபரை பாதுகாப்புப் பணியில் அமர்த்த வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x