Published : 06 Jun 2020 04:18 PM
Last Updated : 06 Jun 2020 04:18 PM
புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கால் சொந்த மாநிலம் திரும்பியதால், தொழில் நிறுவனங்கள் தமிழகத் தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.
“தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில் துறையில் முதலீட்டை ஈர்க்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உள்ள வழிமுறைகள் குறித்து ஆலோசிக்க சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு’ மாநாடு முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இன்று காலை 11 மணி அளவில், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் நடைபெற்ற, "ஒளிரும் தமிழ்நாடு" என்ற காணொலி மாநாட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அவர் தலைமையுரை ஆற்றினார். அதோடு, தமிழ்நாட்டின் தொழில் வளம் பற்றிய கையேட்டையும் முதல்வர் வெளியிட்டார்.
இந்த மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட முன்னணித் தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிஐஐ (CII) தலைவர் ஹரி தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் தினேஷ், சந்தானம், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி, சன்மார் குழுமத்தின் துணைத்தலைவர் விஜய் சங்கர், வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம், டைம்லர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சத்யகம் ஆர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தலைமைச் செயலத்திலிருந்து காணொலி மூலம் முதல்வர் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பெஞ்சமின், தலைமைச் செயலர் சண்முகம், துறை சார்ந்த முதன்மைச் செயலர்கள் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
“தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா தொற்று காரணமாக உலகப் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நம்முடைய வாழ்க்கை முறையும் மாறியுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, வீட்டிலிருந்து பணிகளைக் கவனிப்பது என வாழ்க்கை முறையில் புதிய வடிவங்களை ஏற்றுக்கொள்ளப் பழகி வருகிறோம்.
உலகப் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் சில முயற்சிகளை தமிழக அரசு தொழில் வளர்ச்சியில் எடுத்து வருகிறது. இந்தியாவின் தொழில் வளர்ச்சியில், பொருளாதார மீட்டெடுப்பில் 5 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க சிறப்பு சலுகைகளை அரசு ஏற்கெனவே அறிவித்தது.
அதைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் இந்திய அளவில் கொண்டு செல்லப்படுகின்றன.
மக்களின் வாழ்வாதார, பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 17 தொழில் நிறுவனங்களுடன் ரூ.15 ஆயிரத்து 128 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 47,105 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன.
புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் சொந்த மாநிலத்திற்குச் சென்றுள்ள இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க தொழில் நிறுவனங்கள் தமிழகத் தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT