Last Updated : 06 Jun, 2020 02:56 PM

 

Published : 06 Jun 2020 02:56 PM
Last Updated : 06 Jun 2020 02:56 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கம் உள்ளதா?- வேளாண் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் உள்ளதா? என்று வேளாண் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் உள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

இதனால் உள்ளூர் வெட்டுக்கிளிகளையும், பாலைவன வெட்டுக்கிளி என்று கருதி விவசாயிகள் அச்சப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, வெட்டுக்கிளிகளால் பயிர் பாதிப்பு ஏதும் உள்ளதா? என்று கண்டறியவும், விவசாயிகளின் அச்சத்தை போக்கவும், தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் தலைமையில், வேளாண் விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி விஞ்ஞானி ரவி, உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் செல்வின் இன்பராஜ், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) வசந்தி, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் வெங்கடசுப்பிரமணியன், சுதாமதி, அபர்ணா மற்றும் வேளாண்மை அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் வட்டார வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெல், பருத்தி, கடலை மற்றும் எள் பயிர்களில் வெட்டுக்கிளிகள் தாக்கம் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, பயிர்களில் சில உள்ளுர் வெட்டுக்கிளிகள் மட்டும் காணப்பட்டன. அவைகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. இதுகுறித்து விவசாயிகளுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் தொடர்ந்து மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து இணை இயக்குநர் முகைதீன் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் எதுவும் இல்லை. இதனால் விவசாயிகள் வெட்டுக்கிளி பாதிப்பு குறித்து பயப்படத் தேவை இல்லை என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x