Published : 06 Jun 2020 01:29 PM
Last Updated : 06 Jun 2020 01:29 PM
வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள், எண்ணை வித்துக்கள் ஆகிய விளைபொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், இதனால் இடைத்தரகர்களின் பதுக்கலுக்கும் விலைவாசி உயர்வுக்குமே வழிவகுக்கும் என எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள், எண்ணை வித்துக்கள் ஆகிய விளைபொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கி, அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை வெங்காயம், பருப்பு வகைகளுக்கு அவ்வப்போது விளைச்சல் குறைவு, பதுக்கல் காரணமாக விண்ணை முட்டும் விலை உயர்வில் விற்பனை செய்யப்படுகின்றது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பட்டியலில் இருக்கும் போதே இத்தகைய விளைபொருட்களின் பதுக்கல் அதிகளவு நடைபெறும் சூழலில், தற்போது அரசே இவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்குவதால் பதுக்கல் சர்வசாதாரணமாக நடைபெறும் சூழல் உருவாகும்.
அதேபோல் அதிகளவிலான பொருட்களை பதுக்கி வைத்து இருப்பை அதிகரித்து விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் சூழலும் உருவாகும். இதனால் செயற்கையான தட்டுப்பாடும், இருப்பும் அதிகளவில் காட்டப்படும் சூழல் உருவாகும். இதனால் பொதுமக்களும், விவசாயிகளுமே அதிகளவில் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
இந்த சட்டத் திருத்தத்தால் விவசாயிகள் விளைபொருட்களை அதிகளவில் சேமித்து வைத்து உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்யமுடியும் என்று அரசு விளக்கம் சொன்னாலும் இது இடைத்தரகர்களின் பதுக்கலுக்கும் விலைவாசி உயர்வுக்குமே வழிவகுக்கும்.
அதேபோல் உருளைக்கிழங்கினை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளதால் உதகையில் உள்ள முத்தோரை பாலாடா பகுதியில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் மூடும் நிலை ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டும் எனவும் கூறப்படுகிறது.
ஆகவே, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள், எண்ணை வித்துக்கள் ஆகிய விளைபொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT