Published : 06 Jun 2020 12:25 PM
Last Updated : 06 Jun 2020 12:25 PM
கேரளாவில் வெடி மருந்து வைத்த அன்னாசி பழத்தை கொடுத்து யானை கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை, கைது நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள வனத்துறைக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. டெல்லியில் இதன் முதன்மை அமர்வு செயல்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு சென்னையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது.
கேரளாவில் பெண் யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு, வன விலங்குகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மனிதர்கள் - விலங்குகள் மோதலை தடுப்பது குறித்து ஆய்வு செய்யவும், கேரள தலைமை வனக் காவலர் தலைமையில், தென் மண்டல வன விலங்குகள் குற்ற கட்டுப்பாட்டு பிரிவு மூத்த அதிகாரி, அமைதிப் பள்ளத்தாக்கு வனக்காப்பாளர், மன்னார்காடு மற்றும் புனலூர் மண்டல வன அதிகாரி, பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க நீண்டகால நிர்வாக திட்டத்தை சமர்ப்பிக்க இக்குழுவுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அமைதிப் பள்ளத்தாக்கு வனக் காப்பாளர் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு, தகுந்த திட்டங்களை வகுக்க வேண்டும் என உத்தரவிட்ட தீர்ப்பாயம், ஏற்கனவே திட்டம் வகுத்திருந்தால், அது எந்த நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இக்குழு ஒரு மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
யானை மரணம் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை, கைது நடவடிக்கைகள் குறித்தும், யானையின் மரணத்துக்கு காரணமானவர்களிடம் இருந்து இழப்பீடு வசூல் செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மற்றும் கேரள வனத்துறைக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT